பழனி கோயிலில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வரும் 2019 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வரும் 2019 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்குகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலில் விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தமிழகத்தில் வருவாயில் முதலிடம் வகிக்கும் இக்கோயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் 12 ஆண்டுகளாகியும் கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்படவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதி.
இந்நிலையில் இக்கோயிலுக்கு உடனடியாக கும்பாபிஷேக பணிகளை துவக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து தற்போது கும்பாபிஷேகத்துக்கான பணிகளை கோயில் நிர்வாகம் துவக்கியுள்ளது. வரும் 2019ம் ஆண்டு ஜூன் மாத வாக்கில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக மதுரையைச் சேர்ந்த அறநிலையத்துறை ஸ்தபதி பழனிக்கோயிலை பார்வையிட்டு சென்றுள்ளார். அறநிலையத்துறை ஸ்தபதி அறிக்கை, தொல்லியல்துறை அதிகாரிகள் அறிக்கையைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற குழுவின் உத்தரவின்படி கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் ஒப்புதல் ஆகியவை பெறப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்படவுள்ளது.
ராஜகோபுரம் பாலாலயம் செய்யப்பட்டு, கோபுரங்கள் சீரமைப்புப் பணியும், படிப்பாதை, உட்பிரகாரங்களில் உள்ள கோயில்கள், கோபுரங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு இறுதியாக மூலவர் கருவறைப் பாலாலாயம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பாபிஷேக பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்றால் பக்தர்களின் நீண்டகால வேண்டுதல் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com