கொடைக்கானல் மலைச் சாலைகளில் தடுப்புக் கம்பிகள் அமைக்க வலியுறுத்தல்

கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலைகளில் தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டும் என,  சுற்றுலாப் பயணிகள் நெடுஞ்சாலைத் துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.

கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலைகளில் தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டும் என,  சுற்றுலாப் பயணிகள் நெடுஞ்சாலைத் துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.
கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். 
மேலும், கொடைக்கானலில் விளையக்கூடிய காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்டவற்றை வெளிச் சந்தைக்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால், மலைச் சாலையில் வாகனப் போக்குவரத்து எந்நேரமும் உள்ளது. 
கொடைக்கானல்-வத்தலகுண்டு இடையேயான 65 கி.மீ. தொலைவில் 55 கி.மீ. தொலைவுக்கு மலைச் சாலையாகும். 
இதில், ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ள பகுதியான கும்பரையூர், டம் டம் பாறை,புலிக்குகை, நண்டாங்கரை, வாழைகிரி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர தடுப்புச் சுவர்கள் சேதமடைந்தும், தடுப்புக் கம்பிகள் இல்லாமலும் அபாயகரமான நிலையில் உள்ளன.
இதனால், அப் பகுதிகளில் வாகனங்களில் செல்லும் பயணிகள் அச்சத்துடனேயே செல்லவேண்டியிருக்கிறது. 
மேலும், மலைச் சாலைகளில் சோலார் விளக்குகளும் எரிவதில்லை, தரையில் ஒளிரும் கற்கள் பதிக்கப்படவில்லை போன்றவற்றால், இரவு நேரங்களில் வாகனங்கள் செல்வதில் சிரமமாக உள்ளதாக, வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
எனவே, மலைச் சாலையில் வாகனங்கள் அச்சமின்றி சென்று வர நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சுற்றுலாப் பயணிகளின் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறை அலுவலர் ஒருவர் கூறியது: கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில், பண்ணைக்காடு பிரிவு வரை மட்டுமே கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறைக்குரிய பகுதிகளாகும்.
 மற்ற பகுதிகள் வத்தலகுண்டு நெடுஞசாலைத் துறை வசமுள்ளது. இருப்பினும், மலைச் சாலையில் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவர்கள் மற்றும் தடுப்புக் கம்பிகளை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com