வழக்குரைஞர்கள் சட்டதிருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி உச்சநீதிமன்றம் முன்பு போராட்டம்: போராட்ட குழு அறிவிப்பு

வழக்குரைஞர்கள் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறவில்லையெனில் உச்சநீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் போராட்ட குழு முடிவு செய்துள்ளது.

வழக்குரைஞர்கள் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறவில்லையெனில் உச்சநீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் போராட்ட குழு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் போராட்டக்குழுவின் செயற்குழு கூட்டம் மதுரையை அடுத்த யா.ஒத்தக்கடையில் சனிக்கிழமை நடைபெற்றது. பின்னர்,போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:

வழக்குரைஞர்கள் சட்ட திருத்தத்தை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும். போராட்டத்தை ஒடுக்க நீதிபதிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வழக்குரைஞர்கள் ஆஜராகாத பட்சத்தில் தொடர்ந்து வழக்கை ஒத்திவைக்க கூடாது என்றும், வழக்குரைஞர்கள் இல்லாமல் வழக்கு தொடர்ந்தவர்கள் மூலம் விசாரணையை நடத்தலாம் என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. இந்த சுற்றறிக்கையைக் கடுமையாக எதிர்க்கிறோம். வழக்குரைஞர்களின் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் விரைவில் உச்சநீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

போராட்டங்களின் அடுத்த கட்டமாக ஆக.9 மற்றும் 10 ஆம் தேதிகளில் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் முன்பும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் அனைத்து நீதிமன்றங்கள் முன்பும் சாலை மறியலில் ஈடுபட உள்ளோம். சுதந்திர தினத்தன்று அம்பேத்கர், மகாத்மா காந்தியின் உருவப்படத்துடன் வாயில் கருப்புத் துணி கட்டியவாறு நீதிமன்றங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். ஆகஸ்ட் 16, 17, 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சென்னை கிரீன்வேஸ் சாலை, கடற்கரை சாலை போன்ற இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். சட்ட திருத்தத்தை மறு பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்பு ஆகஸ்ட் 19 ஆம் தேதி அனைத்து மாவட்ட வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆஜராகி தங்களுக்காக தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் ஆஜராவார்கள் என்று தீர்மானம் அளிக்க உள்ளோம் என்றார்.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் சிவசுப்பிரமணியன், சகாபுதீன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் அறிவழகன், துணைத் தலைவர் இமானுவேல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒருங்கிணைப்பாளர் ஷாஜிசெல்லம் மற்றும் அனைத்து மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com