மதுரை மாவட்டத்தில் கட்டுக்குள் எச்ஐவி தொற்று: ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளை ஒப்பிடும்போது எச்ஐவி தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளை ஒப்பிடும்போது எச்ஐவி தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார்.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் சார்பில் அமெரிக்கன் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது: எய்ட்ஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசின் உதவிகள் குறித்து அறிந்து கொள்ளவும் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதல் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. எச்ஐவி தொற்று இல்லாத, எய்ட்ஸ் மூலம் இறப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துவதே இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்தாக உள்ளது. எய்ட்ஸால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இன்றைய இளைஞர்கள் தெரிந்து வைத்துள்ளனர். இந்த விஷயங்களைப் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் 2009-10-இல் எச்ஐவி தொற்றின் தாக்கம் 1.2 சதவீதமாக இருந்தது. 2015-16-இல் அது 0.64 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளின் எச்ஐவி தொற்று 0.15 சதவீதத்தில் இருந்து 0.06 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
எய்ட்ஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் தனி சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களும் சமூகத்தில் ஓர் அங்கம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சிறுதொழில் தொடங்க கடனுதவி மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்தகைய சுயஉதவிக் குழுவினர் சோப்பு, சோப்புத்தூள், பினாயில், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருள்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். எய்ட்ஸ் நோயாளிகள் விவசாயிகளாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பங்கேற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் என்.ருக்மணி, துணை இயக்குநர் கா.வி.அர்ஜுன்குமார், சார்பு நீதிபதி தி.பன்னீர்செல்வம், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் எஸ்.தவமணி கிறிஸ்டோபர், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்க மேற்பார்வையாளர் ப.ஜெயபாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com