அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன், குடிநீர் வசதி கோரும் மனு: 13 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர அரசுக்கு உத்தரவிடக்கோரும் மனுவுக்கு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர அரசுக்கு உத்தரவிடக்கோரும் மனுவுக்கு 13 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
 ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் தாக்கல் செய்த மனு:   ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் 23 வார்டுகள், 510 படுக்கைகள் உள்ளன. நாள்தோறும் சுமார் 200 பேர் உள்நோயாளிகளாகவும், 2500 பேர் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்தும், மேல்சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். மருத்துவமனையில் 40 மருத்துவர்கள், 117 செவிலியர்கள் பணியில் உள்ளனர்.
 மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுடுநீர் வழங்குவதற்கான வசதிகள் இல்லை. மருத்துவர் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
 மேலும் நோயாளிகளை பரிசோதிப்பதற்கான எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியும் இங்கு இல்லை. இதனால் முறையான சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
 எனவே, ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில், சுகாதாரமான குடிநீர் மற்றும் சுடுநீர் வழங்க வசதி ஏற்படுத்தவும், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்தவும், மருத்துவர் மற்றும் செவிலியர்களை போதுமான அளவில் பணியமர்த்தவும் உத்தரவிட வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, நீதிமன்றம் அனுமதித்தால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்ப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் எல்லைக்குள்பட்ட 13 மாவட்டங்களின் ஆட்சியர்களை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிச.15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com