குற்றால அருவியில் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் பயன்பாட்டால் தண்ணீர் மாசு: நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

குற்றால அருவியில்  சோப்பு, ஷாம்பு, சீயக்காய், எண்ணெய்க் குளியலால் தண்ணீர் மாசுபடுமா என்பதை கண்டறிய நிபுணர் குழு அமைத்து ஆய்வு
குற்றால அருவியில் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் பயன்பாட்டால் தண்ணீர் மாசு: நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

குற்றால அருவியில்  சோப்பு, ஷாம்பு, சீயக்காய், எண்ணெய்க் குளியலால் தண்ணீர் மாசுபடுமா என்பதை கண்டறிய நிபுணர் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் குற்றால அருவியில் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்தவும், எண்ணெய்க் குளியல் மேற்கொள்ளவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து குற்றால அருவியில் குளிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோன்று எண்ணெய்க் குளியல் மேற்கொள்ளவும் பயணிகளை அனுமதிப்பதில்லை.

 இந்த நிலையில் குற்றாலத்தில் பேரூராட்சி அனுமதியுடன் மசாஜ் மையங்கள் நடத்தி வந்தவர்கள் உயர்நீதிமன்றத் தடை உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைத்து எண்ணெய்க் குளியலுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதேபோன்று சோப்பு, சீயக்காய் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மசாஜ் மையங்களை நடத்தி வந்தவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடும்போது, வழக்குரைஞர் ஆணையர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கை அடிப்படையில் குற்றாலத்தில் எண்ணெய்க் குளியல் மேற்கொள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 சோப்பு, சீயக்காய், எண்ணெய் போன்றவற்றால் தண்ணீர் எந்தவிதத்திலும் மாசுபடாது. வழக்குரைஞர் ஆணையர்கள் நிபுணர்கள் இல்லை. சோப்பு, சீயக்காய், எண்ணெய் போன்றவற்றால் தண்ணீர் மாசுபடுமா, இல்லையா என்பதைச் சுற்றுச்சூழல் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்திருக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யாமல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் தொழிலை இழந்து பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் என வாதிட்டார்.

  இதையடுத்து நீதிபதிகள், சோப்பு, சீயக்காய், எண்ணெய் போன்றவற்றால் தண்ணீர் மாசுபடுமா என்பதை நிபுணர் குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளலாம். ஆய்வு அறிக்கையில் தண்ணீர் மாசுபடாது என்று தெரியவந்தால் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யலாம். இல்லாதபட்சத்தில் தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்படும். நிபுணர் குழுவில் யார், யாரை நியமிக்கலாம் என்பது குறித்து இந்த வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞர்கள், அரசு வழக்குரைஞர்கள் அக்.26-ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com