ரயில் மறியலுக்கு முயன்ற மாணவர் சங்கத்தினர் கைது

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம்,  நெடுவாசல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம்,  நெடுவாசல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் 15 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
முன்னதாக கட்டபொம்மன் சிலை பகுதியில் கூடிய மாணவர் சங்கத்தினர்,  மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமையில் ஊர்வலமாகப் புறப்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்தனர்.
ரயில் நிலைய வாயிலில் கூடுதல் துணை ஆணையர் முருகேஷ் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்,  மாணவர் சங்கத்தினரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ரயில் நிலைய வாயிலில் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதை மாணவர் சங்கத்தினர் ஏற்க மறுத்ததால் மறியலில் ஈடுபட்ட 15 பேரையும் போலீஸார் கைது செய்து குண்டுகட்டாகத்தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றினர்.
மறியல் போராட்டத்தில் மாவட்டச் செயலர் செல்வா,  மாவட்டத் தலைவர் வேல் தேவா, மாநிலக்குழு உறுப்பினர் குறிஞ்சி உள்பட பலர் பங்கேற்றனர். போராட்டம் குறித்து மாநிலத்தலைவர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது,  விளை நிலங்களை பாலைவனமாக்கும் மீத்தேன்,  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும்.
கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.  விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.  
விவசாயிகளை அரசு புறக்கணிக்கும் நிலை தொடருமானால் மாணவர்களைத் திரட்டி நாடு தழுவிய போராட்டத்தை மாணவர் சங்கம் நடத்தும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com