பாரம்பரிய மருத்துவத்தை மறந்ததால் நோய்களுக்கு ஆளாகியுள்ளோம்: மாநகராட்சி ஆணையர் பேச்சு

பாரம்பரிய மருத்துவத்தை இழந்ததால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிஉள்ளோம் என்று மாநகராட்சி ஆணையர் அனிஷ் சேகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.  

பாரம்பரிய மருத்துவத்தை இழந்ததால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிஉள்ளோம் என்று மாநகராட்சி ஆணையர் அனிஷ் சேகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.    
மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின்(மடீட்சியா) சார்பில் ஆயூஷ் 2017 பாரம்பரிய மருத்துவக் கண்காட்சி மடீட்சியா அரங்கில் வெள்ளிக்கிழமை  தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு மடீட்சியா தலைவர் எல்.முராரி தலைமை வகித்தார். கண்காட்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து  மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஸ்சேகர் பேசியது:
நவீன மருத்துவம் ஒரே நாளில் உருவாகி விடவில்லை. பாரம்பரிய மருத்துவமே காலப்போக்கில் உருமாறி நவீன மருத்துவமாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் உணவே மருந்தாக இருந்ததால் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்து வந்தனர். ஆனால் இன்று உணவுமுறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  துரித உணவு உள்ளிட்ட உணவுப்பழக்கங்கள் மற்றும்  வாழ்வியல் மாற்றங்களால் தொற்றா நோய்களான புற்றுநோய், நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாகியுள்ளோம்.
நாள்பட்ட நோய்களுக்கான தீர்வு நமது பாரம்பரிய மருத்துவத்தில் உள்ளது.  கடந்த காலங்களில் மனிதர்களுக்கு ஏற்பட்ட நோய்களை தீர்ப்பதுதான் மருத்துவம் என்று இருந்தது. ஆனால் தற்போது ஆரோக்கியம் என்ற வரையறைக்குள் உடல்நலம்,  மனநலம், சமூகம் இவை சார்ந்ததுதான் மருத்துவம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 30 ஆண்டுகளில் மதுரைக்கு தேவைப்படும் வசதிகள் தொடர்பாக சிந்தித்து புதிய மதுரையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மதுரையாக உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். புதிய தொழில்முனைவோர்கள் பாரம்பரிய மருத்துவத் தொழிலில் ஈடுபடுவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
தன்வந்திரி  ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர் எஸ்.பிரேம்வேல், ஆயுஷ் கண்காட்சி தலைவர் வி.காளிதாஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


மூலிகை மருந்துகளுடன் இலவச சிகிச்சை
பாரம்பரிய மருத்துவக் கண்காட்சியில் 70 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இதில் சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் இடம்பெற்றுள்ள  அரங்கில் பார்வையாளர்களை பரிசோதிக்கும் சித்த மருத்துவர்கள் அவர்களுக்கு தேவையான சித்த மருந்துகள், மாத்திரைகள், தைலங்களையும் இலவசமாக வழங்குகின்றனர். மேலும் சித்த மருத்துவம் குறித்த விளக்கவுரை, படிப்புகள், பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் தொடர்பான கையேடுகளையும் விநியோகம் செய்யப்படுகிறது.  உடல் பருமன், நீரிழிவு நோய்களை தீர்ப்பதற்கான சித்தா, ஆயுர்வேதம், இயற்கை சிகிச்சை மருத்துவ அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சித்த மருத்துவம் சம்பந்தப்பட்ட பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
  ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி குறித்த கருத்தரங்குகளும் நடக்கின்றன. தினசரி காலை 10 முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் இந்த கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com