கொத்தடிமைகளின் வாழ்க்கை நிலை

கொத்தடிமைத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை குறித்து, அவர்கள் தங்க வைக்கப்படும் குடியிருப்பைப் போன்ற மாதிரி வீடு அமைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கொத்தடிமைத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை குறித்து, அவர்கள் தங்க வைக்கப்படும் குடியிருப்பைப் போன்ற மாதிரி வீடு அமைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் குடிசையில் தங்க வைக்கப்படும் கொத்தடிமைத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலை வெளிப்படுத்தும் வகையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாதிரி வீடு அமைக்கப்பட்டிருந்தது. கொத்தடிமைத் தொழிலாளர்கள் வேலை அளிப்போரால் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் வகையில், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் கருத்துப் பகிர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழக அரசின் வருவாய் நிர்வாகத் துறை ஆதரவுடன்'இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன்' அமைப்பு இந்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் தொடங்கி 9-வது மாவட்டமாக மதுரையில் திங்கள்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இந்த நிகழ்வை நடத்துகிறது.
மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் சின்னராஜூ, முருகன், சண்முகம் ஆகியோர் கொத்தடிமைத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்படும் வீட்டின் மாதிரியை அமைத்து, பொதுமக்களிடம் கொத்தடிமைகளின் நிலை குறித்து விளக்கினர்.
மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளரான வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பரவத்தூரைச் சேர்ந்த சின்னராஜூ (28) கூறுகையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்து வந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்பப்பட்டேன்.
ஆனால், சரியான சாப்பாடு கொடுக்காமல் அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்தம் செய்தனர். எனது நிலை குறித்து சித்தூர் ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் என்னுடன் கொத்தடிமைகளாக இருந்த அனைவரையும் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பினர். இப்போது இளநீர் வியாபாரம் செய்வதுடன் எங்களது கிராமத்தினருக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com