சுதந்திர தின விழா: 315  பயனாளிகளுக்கு ரூ.48 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்-சிறப்பாக பணிபுரிந்தோருக்கு கேடயம் வழங்கிப் பாராட்டு

மதுரையில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  315 பயனாளிகளுக்கு ரூ.48.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்

மதுரையில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  315 பயனாளிகளுக்கு ரூ.48.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றுகளையும் ஆட்சியர் வழங்கினார்.
    மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்  தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அவருடன் ஊரகக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இருந்தார். அதன் பின்னர்  காவல்துறை,  சிறப்பு பட்டாலியன் பிரிவு,  ஊர்க்காவல்படை  மற்றும் தேசிய மாணவர் படை உள்ளிட்டோர் அளித்த அணிவகுப்பை ஆட்சியர் பார்வையிட்டார்.
  தியாகிகள் அமர்ந்த பகுதிக்குச் சென்ற ஆட்சியர், தியாகிகள் பாலகிருஷ்ணன்,  கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருக்கு கதராடை அணிவித்தும்,  இனிப்புகள் வழங்கியும் கெளரவித்தார். தியாகிகளின் வாரிசுகளுக்கும் அவர் கதராடை அணிவித்து இனிப்புகளை வழங்கினார்.
   அதன்பின் நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் விபத்து நிவாரண உதவித் தொகை 19.20 லட்சத்தை 26 பேருக்கும், உழவர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் நலத்திட்டங்களை 171 பேருக்கும், இலவச வீட்டு மனைப்பட்டாவை 29 பேருக்கும் வழங்கினார்.
 மேலும்,  பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையில் 15 பேருக்கு  இலவச தையல் எந்திரம்,  10 பேருக்கு இலவச தேய்ப்பு எந்திரம்,  26 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா,  வேளாண்மைத் துறை சார்பில் 2 பேருக்கு விசைத்தெளிப்பான் மற்றும் விதைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு மூன்று சக்கர வண்டி  மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட 315 பேருக்கான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
  சிறந்த பணிகளுக்காக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி,  வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார், லட்சுமி, சிறந்த சேவைக்காக செஞ்சிலுவைச் சங்கம் கோபாலகிருஷ்ணன், யோகப்பயிற்சிக்காக மாணவி சிந்துஷா மற்றும் சிறந்த ஆசிரியர்கள்,  அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கேடயங்களையும், பாராட்டுச் சான்றுகளையும் ஆட்சியர் வழங்கினார்.
  கலைநிகழ்ச்சிகள்: தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  ஓ.சி.பி.எம். பள்ளி மாணவியரின் தேசிய பக்தி பாடல் நடனம், அரசு கள்ளர் பள்ளி மாணவியரின் தப்பாட்டம்,  யாதவா மகளிர் கல்லூரி மாணவியரின் யோகா,  அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் பெண்கள் பள்ளியின் சார்பில் கிராமிய நடனம், டோக் பெருமாட்டி கல்லூரி மாணவியரின் குடை நடனம், யா. ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியரின் கூட்டு உடற்பயிற்சி நடனம், சித்து மெட்ரிக். பள்ளி மாணவியரின் ஜிம்னாஸ்டிக்  ஆகியவை நடைபெற்றன.
   சிறந்த துறைகளுக்குப் பரிசு:  அரசு சித்திரைப் பொருள்காட்சியில் சிறந்த அரங்கிற்கான முதல் பரிசு தோட்டக்கலைத் துறைக்கும்,  இரண்டாமிடம் காவல்துறைக்கும், மூன்றாம் பரிசு வேளாண்மைத்துறைக்கும் வழங்கப்பட்டன.
அரசுப் பிரிவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு முதல் பரிசும், மதுரை மாநகராட்சிக்கு இரண்டாம் பரிசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன.
   பங்கேற்றோர்: நிகழ்ச்சியில் தென்மண்டல காவல்துறை தலைவர் சைலேஷ்குமார் யாதவ், மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரதீப்குமார்,  மதுரை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன்,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து,  மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா மற்றும்  முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ஆதிராமசுப்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com