அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் நியமனத்துக்கு தடை கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் நியமனத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் நியமனத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எம். வானதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
 மாற்றுத்திறனாளியான நான் எம்.டெக் முடித்துள்ளேன். இந்நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம்  ஜூலை 28ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதில் 4 சதீவீத இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 இதற்காக செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில் பங்கேற்றேன். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நவம்பர் 23 முதல் 25 வரை மதுரை, விழுப்புரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டோர் பட்டியலைப் பார்த்தபோது அதில் மாற்றுத்திறனாளிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு மாற்றுத்திறனாளிகளின் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணியிடங்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, மாற்றுத்திறனாளிகளை மட்டும் தவிர்த்து விட்டு அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலர், உயர் கல்வித்துறைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com