அரசுப் பேருந்துகளில் ஒரே மாதிரியான  கட்டணம் வசூலிக்கக்கோரி வழக்கு: போக்குவரத்துத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு போக்குவரத்துத்துறை

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு போக்குவரத்துத்துறை ஆணையர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் நாகல்நகரைச் சேர்ந்த நல்லையம்பெருமாள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: 
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தின்படி தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டண விகிதம் 2011-ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு ரூ. 18.50-இல் இருந்து ரூ. 28 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு மாறாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் திண்டுக்கல் - மதுரைக்கு ரூ. 33  கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு ரூ. 35-க்கு பதிலாக ரூ. 45 கட்டணமாக  வசூலிக்கப்படுகிறது. மேலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2-இல் இருந்து ரூ. 3-ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் ரூ. 3, ரூ. 4 பயணச் சீட்டுகள் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் வழங்கப்படுவதில்லை.
அதேநேரத்தில் சென்னை,  திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 3  பயணச் சீட்டுகள் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச கட்டண பேருந்துகள்  இயக்கப்படுவதில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதன் காரணம் தெரியவில்லை.
எனவே  அரசு போக்குவரத்துக் கழகத்தில்  2011-ஆம் ஆண்டின் அரசாணையின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம். வேணுகோபால், ஆர். தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதிகள்,  மனுவுக்கு தமிழக போக்குவரத்துத்துறை ஆணையர், போக்குவரத்துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு  ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com