மதுரையை பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்கத் திட்டம்: ஆட்சியர் தகவல்

மதுரையை பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க  செயல்திட்டம் தீட்டப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் கூறினார்.

மதுரையை பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க  செயல்திட்டம் தீட்டப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் கூறினார்.
 மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வுக்கான திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் தேசிய விருது மதுரை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.  புதுதில்லியில் டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவுக்கு விருதை வழங்கினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வியாழக்கிழமை கூறியது:
 மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வுக்கான திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக மதுரை மாவட்டத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016-2017-இல் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் பிற துறைகளின் சார்பில் ரூ. 50.15 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் 42,537 மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனர். வரும் காலங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படும்.  அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பிச்சைக்காரர்கள் இல்லாத மதுரை...:  பல்வேறு பெருமைகளைக் கொண்ட மதுரை மாவட்டத்தில், பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வறுமை மற்றும் பிள்ளைகள் பராமரிக்காமல் விடுவதால் முதியவர்கள் பலரும் பிச்சைக்காரர்களாக மாறிவிடுகின்றனர்.
 இத்தகைய நபர்களை மீட்டு உரிய மறுவாழ்வு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். 
 மாவட்டம் முழுவதும் பிச்சை எடுப்பவர்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும். அதன் பிறகு மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அடுத்த 3 மாதங்களில் மதுரை மாவட்டம்,  பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com