மாவட்டந்தோறும் 10, பிளஸ் 2 மாணவர்க்கு காமராஜர் விருது வழங்க குழுக்கள் அமைப்பு

தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கல்வி,  தனித்திறன் அடிப்படையில் பெருந்தலைவர் காமராஜர் விருது

தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கல்வி,  தனித்திறன் அடிப்படையில் பெருந்தலைவர் காமராஜர் விருது மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. அதற்கான மாணவரை தேர்வு செய்ய மாவட்ட அளவில் தற்போது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விருதுக்குரியவர்களாக பரிந்துரைக்கப்படவுள்ளனர். கலைத்திறன், விளையாட்டு, சாரண, சாரணியர், நாட்டு நலப்பணி போன்ற அமைப்பில்  செயல்பாடுகள், அறிவியல் மன்றம் போன்ற அறிவியல் செயல்பாடுகளில் ஈடுபாடு என்பன  உள்ளிட்ட தனித்திறன்கள் அடிப்படையில் மாணவர்கள்  தேர்வு செய்யப்படவுள்ளனர்.  இதில் கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் இணைச் செயல்பாடுகள் என நான்கிலும் தனித்தனியாக 10 சதவிகிதம் என மொத்தம் 40 சதவிகிதம் மதிப்பெண் வழங்கி மாணவரைத் தேர்வு செய்யலாம். 
 கலைத்திறன் மற்றும் விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பள்ளி,  மாவட்டம்,  மாநிலம்,  தேசியம் என போட்டிகளையும், நிகழ்ச்சிகளையும்  பிரித்து அதில் மாணவர் பெற்ற சிறப்பிடங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனித்திறன், கல்வி அடிப்படையில் மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தலா 3 பேரை ஆசிரியர்கள் பரிந்துரைக்கலாம். அதன்படி மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பில் 20 பேரையும், பிளஸ் 2 வில் 20 பேரையும் மாவட்ட குழு தேர்வு செய்து மாநில பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பிவைப்பர். அதன்படி காமராஜர் விருதுக்கு உரிய மாணவர்கள் இறுதியாகத்  தேர்வு செய்யப்படுவர். 
  குழு விவரம்:  மதுரை மாவட்டத்தில் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்யும் குழுவிற்கு தலைவராக முதன்மைக் கல்வி அலுவலர் என். மாரிமுத்துவும், உறுப்பினர்களாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் ச. முருகானந்தம் (மதுரை), கி.ஜெ. ஜமுனா (மேலூர்), சோ.முருகேசன் (உசிலம்பட்டி) மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெ.திருப்பதி (டி.முள்ளிப்பள்ளம்),  ராஜசேகரன்  (பரவை), ஜெ.ரகுபதி (ஊமச்சிகுளம்),  சி.தென்கரைமுத்துப்பிள்ளை (வேடர்புளியங்குளம்), கல்வியாளர்கள் ஸ்ரீநிவாசமூர்த்தி, ரா.லோகநாதன் ஆகிய 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.   
  ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பத்தாம் வகுப்பில் 15 பேர் மற்றும் பிளஸ் 2 வில் 15 பேர் என மொத்தம் 30 பேரைத் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதனடிப்படையில் மாநில அளவில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 960 மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருதுடன், ரூ. 1.45 கோடி வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com