தமிழ் பண்பாட்டுடன் படைப்புகள் இருக்க வேண்டும்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

மானுடத்தை நோக்கிய இலக்கில் தமிழ் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் படைப்பாளிகள் எழுத வேண்டும் என குன்றக்குடி அடிகளார் கூறினார்.

மானுடத்தை நோக்கிய இலக்கில் தமிழ் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் படைப்பாளிகள் எழுத வேண்டும் என குன்றக்குடி அடிகளார் கூறினார்.
 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறை,  தமிழியற்புலம் மற்றும் மலேசியத் தமிழ் மணி மன்றம், திருமூர்த்திமலை தென்கலைத் தமிழ்ச்சங்கம் சார்பில் உலகளவிய தமிழ்ச் சிறுகதைகள் நூற்றாண்டு,  சிறுகதைகள் நூல் வெளியீடு, சிறுகதைப் போட்டி பரிசளிப்பு, முதுபெரும் படைப்பாளர்களுக்கு விருது,  பாராட்டு என ஐம்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
   விழாவில், உலகளாவிய தமிழ்ச் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்  வழங்கி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியது:    தமிழானது எழுத்து, சொல்லுக்கு மட்டுமல்லாது வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த மொழியாகும். அனைத்து நிலைகளிலும் நாம் எப்படி வாழவேண்டும் என்பதை வகுத்துத் தந்துள்ளது தமிழ் இலக்கியங்கள்.  ஏழாம் நூற்றாண்டில் சைவத்தை நிலைநாட்ட திருஞானசம்பந்தர் வைணவர்களோடு சொற்போர் புரிந்தது சமயத்தை நிலைநாட்ட அல்ல. தமிழின் மேன்மையை நிலைநாட்டுவதற்குத்தான். 
   காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது வாய்ப்பு ஏற்படும் போது செல்வத்தை சேர்த்துக்கொள் என்பதாக அர்த்தங்கொள்ளப்படுகிறது.  ஆனால், உடலில் உயிர் உள்ளபோதே அறச்செயல்களைச் செய்து புகழைத் தேடிக்கொள் என்பதே அதன் உண்மை பொருளாகும்.  
   சாதாரண காந்தியை அகிம்சைப் போராளியாக மாற்றியவர்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்களான தில்லையாடி வள்ளியம்மை போன்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ் இலக்கியங்கள் மனிதநேயத்தை தாங்கிப் பிடிப்பவையாகவே இருக்கின்றன.   தமிழ்ப்  படைப்பாளர்கள் பண்பாட்டுத் தளத்தை உருவாக்கும் எழுதவேண்டும்.  பகையில்லா, பசியில்லா உலகை உருவாக்கும் வகையில் தாயுள்ள பண்பாட்டை உருவாக்கும் வகையில் படைப்புகள் படைக்கப்படவேண்டும்  என்றார்.
  நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.பி.செல்லத்துரை பேசியது:  தமிழின் பெருமை நமது எல்லைக்குள் மட்டும் அடங்கிவிடாமல், பாரெங்கும் பரவியிருக்கும் தமிழர்களைத் தாண்டியும் அறியப்படுவது அவசியம்.  உலகப் பார்வைக்கு தமிழர்கள் தாய்மொழியுடன், பிற மொழி அறிவையும் பெறுவது அவசியம்  என்றார்.
  நிகழ்ச்சியில் முதல் சிறுகதைத் தொகுதி நூல் முதல்படியை குன்றக்குடி அடிகளார் வெளியிட மலேசியத் தமிழ்மணி மன்றம் தேசியத் தலைவர் சு.வை.லிங்கம் பெற்றுக்கொண்டார்.  இரண்டாவது சிறுகதைத் தொகுதியை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கி. கருணாகரன் வெளியிட,  உகாண்டா தமிழ்ச்சங்க பொதுச்செயலர் முகம்மதுரபீ, ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு மைய செயலர் அனகன்பாபு, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் ரா.விமலன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
  விழாவில்  மலேசிய தமிழ்மணி மன்றம், உகாண்டா தமிழ்ச் சங்கம் மற்றும் குரு மருத்துவமனை ஆகியவற்றுடன் காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை உலகளாவிய தமிழ்ச்சிறுகதை நூற்றாண்டு விழா பேருரையாற்றினார். 
 மலேசிய தமிழ்மணிமன்றம்  கோகிலவாணி, தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் வி.சின்னையா வரவேற்றார்.  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், தமிழியல்துறை, புலம் தலைவர் பொறுப்பு போ.சத்தியமூர்த்தி நன்றி கூறினார். 
 நிகழ்ச்சியில் பேராசிரியர் ரா.மோகன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com