வங்கியில் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்ற இருவர் கைது: கார் பறிமுதல்

மதுரையில் வங்கியில் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்ற இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 75 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

மதுரையில் வங்கியில் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்ற இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 75 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
மதுரை ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள வங்கிக் கிளைக்கு  சனிக்கிழமை மாலை வந்த இருவர் பணம் செலுத்தும் படிவத்தை நிரப்பி கணக்கு எண் ஒன்றில் ரூ.30 ஆயிரம் ரூபாய்க்கு, 15 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களைக்  கொடுத்துள்ளனர்.  அவர்கள் அளித்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வித்தியாசமாக இருந்ததால் வங்கி ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கள்ள நோட்டுகளை பரிசோதிக்கும் இயந்திரத்தில் அந்த ரூபாய் நோட்டுக்களை பரிசோதித்த போது அவை அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என தெரிய வந்தது.
 இதையடுத்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் இருவரையும் மேலாளர் விசாரணைக்கு அழைத்துள்ளார்.  அப்போது  இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை வங்கிப் பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் பிடித்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் கரிமேடு போலீஸார் அங்கு சென்று இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில் மதுரை மணிநகரம் சேனைத்தலைவர் குடியிருப்பைச் சேர்ந்த ஆனந்தராஜ் (52),  கோ.புதூர் சூர்யாநகரைச் சேர்ந்த பாபு சக்கரியா (45) என்பது தெரிந்தது. மேலும் இருவரும் வந்த காரில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.  இதையடுத்து வங்கிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்த காரை சோதனையிட்டதில்  மறைவிடத்தில் பதுக்கி வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் 60 கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து வங்கி மேலாளர் வினோத்குமார்(29) அளித்தப் புகாரின் பேரில் இருவரையும் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் 75 மற்றும் காரையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com