நீதிபதி கிருஷ்ணய்யரை இளம் வழக்குரைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்
By DIN | Published on : 18th July 2017 08:40 AM | அ+அ அ- |
மறைந்த உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரை இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் சங்கம் (எம்எம்பிஏ) சார்பில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியதாவது: வழக்குரைஞரோ, நீதிபதியோ எத்தகைய பண்புகளை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு மிகச்சிறந்த உதாரணம். அவரை இளம் வழக்குரைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை அவர் தன் வாழ்நாளில் வழங்கியுள்ளார் என்றார்.
இதைத் தொடர்ந்து வழக்குரைஞர் வி.லட்சுமணன் பேசுகையில், கம்யூனிச கொள்கைகளை பரப்புவதற்காக நீதிமன்றத்தை பயன்படுத்தினார் என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டிற்காக அவர் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். ஆனாலும், தன்னுடைய கொள்கையில் அவர் என்றும் பின்வாங்கியது இல்லை. தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று பல தருணங்களில் பெருமையாக கூறியுள்ளார். தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை அவர் வழங்கியுள்ளார் என்றார். சங்கத் தலைவர் கு.சாமித்துரை, பொதுச் செயலர் ஜெ.அழகுராம்ஜோதி மற்றும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.