மருத்துவ உதவி அதிகாரிகள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ உதவி அதிகாரிகள் (பொது) நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மருத்துவ உதவி அதிகாரிகள் (பொது) நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 விருதுநகர் மாவட்டம் ஆலடிப்பட்டியைச் சேர்ந்த மருத்துவர் சகாய பனிமலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
 மருத்துவப் பணிகள் தேர்வாணையம் நவம்பர் 2016-இல் உதவி மருத்துவ அதிகாரி (பொது) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு 2017 பிப்ரவரியில் நடைபெற்றது. அதில் தேர்வானவர்களின் பட்டியலை தயாரித்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யாததால் இத்தேர்வை என்னால் எழுத இயலவில்லை. இதனால் அடுத்த அறிவிப்புக்கு நான் உள்பட பலரும் காத்திருந்தோம்.
 இந்நிலையில் முந்தைய அறிவிப்பின் அடிப்படையில் ஜூலை 5 முதல் 18 ஆம் தேதி வரை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டுக்கான அறிவிப்பு ஏதும் வெளியிடாமல், பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடாமல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்துகின்றனர். இதனால் கடந்த முறை தேர்வு எழுதாமல் காத்திருந்த பலர் பாதிக்கப்படுவர்.  எனவே தற்போதுள்ள காலியிடங்களுக்கு முறையாக அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு வைத்து தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். தற்போது நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு தடை விதித்து, உதவி மருத்துவ அதிகாரி பணியிடத்தை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனு, நீதிபதி டி.ராஜா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 2016 ஆம் ஆண்டு அறிவிப்பின் அடிப்படையில் தற்போது நடைபெறும் மருத்துவ உதவி அதிகாரிகள் (பொது) நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து, இதுதொடர்பாக சுகாதாரத்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com