இரு நகைக் கடைகளில் 80 பவுன் நகை, 2.5 கிலோ வெள்ளி திருட்டு: ஷட்டர் கதவுகளை வளைத்து துணிகரம்

மதுரையில் இரு நகைக் கடைகளில் 80 பவுன் தங்க நகை, 2.5 கிலோ வெள்ளியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இரு நகைக் கடைகளில் 80 பவுன் தங்க நகை, 2.5 கிலோ வெள்ளியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  மதுரை ஜடாமுனி கோவில் தெருவில் ஏராளமான நகைக்கடைகள் உள்ளன. இங்குள்ள சந்துப்பகுதியில் வணிக வளாகம் உள்ளது. இதில் ஒன்றில்  தெற்குமாசி வீதியைச் சேர்ந்த ஜெயராமன்(52) வெள்ளி நகைகள், பொருள்கள் விற்பனைக் கடை நடத்தி வருகிறார்.  இவரது கடைக்கு அருகே  திருப்பாலையைச் சேர்ந்த முருகன் தங்க நகைக் கடை நடத்தி வருகிறார்.   இந்நிலையில், சனிக்கிழமை இரவு விற்பனை முடிந்த நிலையில் நகைக் கடைகளை அடைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
 ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை காலை வழக்கம்போல கடைகளை திறக்கச் சென்றனர். அப்போது முருகனின் நகைக்கடையில் இரும்பு ஷட்டர் கதவு வளைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடையில் பூட்டு உடைக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த முருகன் ஷட்டர் கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது கடையின் உள்கதவில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிடப்பட்டிருந்தது. மேலும் கடையில் நகைகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகங்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க மோதிரம், சங்கிலிகள், தோடு, நெக்லஸ், வளையல்கள் உள்பட 80 பவுன் நகைகள், 250 கிராம் வெள்ளி ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. மேலும் கடையில் பணப்பெட்டியையும் உடைத்து ரூ.10 ஆயிரமும் திருடப்பட்டிருந்தது.
மேலும் ஜெயராமனின் வெள்ளி பொருள்கள் விற்பனைக் கடையிலும் ஷட்டர் கதவுகளை வளைத்து உள்ளே சென்று 2 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்றுள்ளனர்.    சம்பவம் தொடர்பாக முருகன், ஜெயராமன் ஆகியோர் அளித்தப் புகார்களின்பேரில் விளக்குத்தூண் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
  மாநகர் குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயந்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச்சென்று பார்வையிட்டனர்.
       மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கடைகளில் பதிந்திருந்த கைரேகைப் பதிவுகளை சேகரித்தனர்.  
   போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகம்,  24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ள மீனாட்சி அம்மன் கோயில் ஆகியவற்றுக்கு அருகே இரு கடைகளில் நடந்துள்ள துணிகர திருட்டுச் சம்பவம் நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாத நகைக்கடைகள்
தற்போது திருட்டு நடந்துள்ள நகைக்கடைகளில் தடயங்களை ஆய்வு செய்யும்போது, அங்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்று தெரியவந்தது. அந்த வணிக வளாத்தில் உள்ள பல கடைகளிலும் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் அந்தக்கடையின் உள்பகுதி மட்டுமே தெரியும்படி பொருத்தப்பட்டிருந்து.  அந்தத்தெருவில் உள்ள மற்றொரு  நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் திருடர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் உருவம் பதிவாகி இருந்தது.  திருட்டு நடந்த நகைக்கடையின் பெயர் பொறித்த பையில் பொருள்களை நபர்கள் தூக்கிச்செல்வது பதிவாகி இருந்தது.  அந்தப்பதிவை கைப்பற்றிய போலீஸார் அதில் உள்ள நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com