உணவு பாதுகாப்புச் சட்டத்தில் இணைந்ததால் தமிழகத்தில் இலவச அரிசிக்கு சிக்கல்: ரேஷன் ஊழியர் சங்க கருத்தரங்கில் தகவல்

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் இணைந்ததன் விளைவாக கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தால் தமிழகத்தில்

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் இணைந்ததன் விளைவாக கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தால் தமிழகத்தில் இலவச அரிசி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரேஷன் ஊழியர் சங்க கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம் மற்றும் புறநகர் மாவட்ட கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம் சார்பில், பொது விநியோக முறையை பலப்படுத்தி ரேஷன் கடைகளை பாதுகாக்க வேண்டும். ரேஷன் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு கருத்தரங்கம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு மாவட்டத் தலைவர் ஜி.எஸ். அமர்நாத் தலைமை வகித்தார். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் ஏ. கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். கூட்டுறவு ஊழியர் சங்க பொதுச்செயலர் இரா. லெனின் வாழ்த்திப்பேசினார்.
கருத்தரங்கில் நிர்வாகிகள் பேசும்போது, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு இணைந்துள்ளது. இதன் விளைவாக, முன்பு மத்தியத் தொகுப்பிலிருந்து ஒரு கிலோ அரிசியை ரூ. 8-க்கு வாங்கி வந்த நிலையில் தற்போது ரூ. 22.50-க்கு வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் அரிசிக்கு கூடுதல் தொகை ஒதுக்கப்படாததால் இலவச அரிசி கொள்முதலிலும் பிரச்னை உள்ளது. சிறப்பு விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்க வேண்டிய பருப்பு வகைகள், பாமாயில் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்காததால் பொதுமக்களுக்கு இவற்றை வழங்க முடியாத நிலை உள்ளது. 3 ஆண்டுகளாக கூட்டுறவு நிறுவனங்களுக்கு விடுவிக்க வேண்டிய மானியங்கள் விடுவிக்கப்படாமல் ஊழியர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் ரேஷன் அட்டைகளை முன்னுரிமை அட்டைகள், முன்னுரிமையற்ற அட்டைகள் என்று பிரிக்கப்பட்டு படிப்படியாக பொது விநியோக முறையை கைவிட்டுச் செல்லும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கவலை தெரிவித்தனர்.
கருத்தரங்கில் மதுரை மாநகர், புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ரேஷன் ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com