மதுரையில் ஒரே நாளில் 6 பெண்களிடம் நகை பறிப்பு

மதுரை நகரில் ஒரே நாளில் 6 பெண்களிடம், இருசக்கர வாகனத்தில் வலம் வரும் நபர்கள் நகையை பறித்துச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை நகரில் ஒரே நாளில் 6 பெண்களிடம், இருசக்கர வாகனத்தில் வலம் வரும் நபர்கள் நகையை பறித்துச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை ஞானஒளிவுபுரத்தைச் சேர்ந்த ஜஸ்வந்த் ஜெயராம் மனைவி மைக்கேல் பிரவீனா (30). இவர் அப்பகுதியில் உள்ள மெய்யப்பன் 3-ஆவது தெரு வழியாக கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் மைக்கேல் பிரவீணா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மீனாம்பாள்புரம் முல்லை நகரைச் சேர்ந்த அந்தோணி பாக்கியம் மனைவி அகல்யா (21). இவர் திருவள்ளுவர் தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அகல்யா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்பாண்டி மனைவி கற்பகஜோதி (27). இவர் கொன்னவாயன் சாலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கற்பகஜோதி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து செல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை ராம்நகர் தளபதி நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (42). தனது மனைவியுடன் திருமண வீட்டுக்குச் சென்றுவிட்டு பரவையில் உள்ள தனியார் குளிர்பான நிறுவனம் முன் நடந்து வந்துள்ளனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் முருகேசனின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
 சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டின் நகரைச் சேர்ந்த அர்ஜூன் மனைவி பாக்கியலட்சுமி(42). இவர் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு கரிசல்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் பாக்கியலட்சுமியை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். சம்பவம் தொடர்பாக பாக்கியலட்சுமி அளித்தப் புகாரின்பேரில் கூடல்பதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை சர்வேயர் காலனி எஸ்.கொடிக்குளத்தைச் சேர்ந்த செல்லத்துரை மனைவி ஐஸ்வர்யா (23). இவர் பணி முடிந்து மாட்டுத்தாவணி - சர்வேயர் காலனி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ஐஸ்வர்யா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். சம்பவம் தொடர்பாக கோ.புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வுருகின்றனர்.
தொடரும் நகை பறிப்பு சம்பவங்கள்:
மதுரை நகரில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வரும் நகைபறிப்புச் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரையில் தொடர் நகை பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கும்பலை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இந்நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 6 பெண்களிடம் நகைபறிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளது போலீஸாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com