தமிழக மருத்துவக் கவுன்சில் பதவிக்காலம் முடிந்ததாக அறிவிப்பு: அரசின் எச்சரிக்கையால் முடிவுக்கு வந்த மோதல்

தமிழக மருத்துவக் கவுன்சிலின் பதவிக்காலம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கவுன்சிலின் இரு அணிகளுக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

தமிழக மருத்துவக் கவுன்சிலின் பதவிக்காலம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கவுன்சிலின் இரு அணிகளுக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
தமிழக மருத்துவக் கவுன்சில் இரு அணியாக இயங்கி வந்தது. இதனால் மருத்துவக் கவுன்சில் ஆற்ற வேண்டிய கடமைகளை முறையாகச் செய்யவில்லை. இந்நிலையில், மருத்துவக் கவுன்சில் தலைவர் பதவியை விட்டுத்தருவதில் பிரச்னை எழுந்த நிலையில், ஒரு அணி தங்களது பதவிக்காலத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொண்டதாக சில நாள்களுக்கு முன்பு தீர்மானத்தை நிறைவேற்றினர். இதை எதிர்த்து மற்றொரு தரப்பு நீதிமன்றத்துக்கு சென்றது.
மருத்துவக் கவுன்சிலில் இரு அணிகள் செயல்படுவது குறித்து அரசின் கவனத்துக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றனர். இதையடுத்து இரு அணிகளையும் அரசு உயர் அதிகாரிகள் எச்சரித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவரும், தமிழக மருத்துவக் கவுன்சில் தலைவருமான கே. செந்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
தமிழக மருத்துவக் கவுன்சிலின் 7 உறுப்பினர்கள் கடந்த 2012 ஜூன் மாதம் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மருத்துவக் கவுன்சிலின் பதவிக்காலம் 5 ஆண்டுகாலம். இந்நிலையில் அவர்களின் பதவிக்காலம் திங்கள்கிழமையோடு முடிவடைந்துள்ளது.
மருத்துவக் கவுன்சிலின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் பதவியேற்க தயாராக இருக்க வேண்டும் என்பது விதிமுறை. எனவே மருத்துவக் கவுன்சில் தேர்தல் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை அணுகியதால் தேர்தல் நடத்தப்படவில்லை. மருத்துவக் கவுன்சில் தேர்தல் தொடர்பாக சில வழிகாட்டுதல்கள் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படும். புதிய மருத்துவக் கவுன்சில் பதவியேற்கும் வரை மருத்துவக் கவுன்சிலில் உள்ள அரசு நியமன உறுப்பினர்கள் மூவர் பொறுப்பாளர்களாக செயல்படுவர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com