மதுக்கடை அனுமதியை ரத்து செய்ய ஆட்சியரிடம் பெண்கள் மனு

மதுரை மாநகராட்சி 88-ஆவது வார்டு எம்.கே.புரத்தில் புதிதாக மதுக்கடை அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யுமாறு அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

மதுரை மாநகராட்சி 88-ஆவது வார்டு எம்.கே.புரத்தில் புதிதாக மதுக்கடை அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யுமாறு அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 அம்மனுவில் கூறியிருப்பதாவது: எம்.கே.புரம் பிரதான சாலையில் 20 மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்த 2 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மருத்துவமனை, கோயில் அருகே உள்ள இந்த கடைகள் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. இந்நிலையில் புதிதாக மதுக்கூடத்துடன் கூடிய மதுக்கடைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 ஏற்கெனவே பொதுமக்கள் மதுக்கடையால் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருவதால் புதிய கடைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர்: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட முனிச்சாலை சீனிவாசா நகர் 1-ஆவது தெருவில் மாநகராட்சி குடிநீர்க் குழாயில் கழிவுநீரும் கலந்து வருகிறது. எனவே கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, இப்பகுதியினருக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் ஆட்சியரிடம் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். கழிவுநீர் கலந்த குடிநீரையும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அவர்கள் கொண்டு வந்திருந்தனர்.
சுரங்க நடைபாதை தேவை: பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் சசிராமன் தலைமையில், திருப்பரங்குன்றம் பகுதி நிர்வாகிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், திருப்பரங்குன்றம் ரயில்நிலையம் அருகே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளதால், ரயில்வே கேட் அகற்றப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் ரயில் பாதையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் ரயில் பாதையைக் கடக்க முயன்று 5 பேர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். ஆகவே, பொதுமக்கள் ரயில் பாதையைக் கடக்கும் வகையில் சுரங்க நடைபாதை அமைத்துத் தர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.  
 இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவி, மாற்றுத் திறனாளிகள் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 408 மனுக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com