வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு

மதுரையில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் நகையை மர்ம நபர் பறித்துச் சென்றதாக சனிக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது

மதுரையில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் நகையை மர்ம நபர் பறித்துச் சென்றதாக சனிக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை தெற்குவாசல் ராமச்சந்திராபுரம் 1-ஆவது தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மனைவி செல்லம்மாள் (78). இவர் வீட்டில் உள்ள அறை ஒன்றில் கட்டிலில் சனிக்கிழமை படுத்திருந்தார். அப்போது வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர், செல்லம்மாள் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறிக்க முயன்றாராம். இதை செல்லம்மாள் தடுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் அவரைத் தாக்கி சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்லம்மாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்தப் புகாரின் பேரில் தெற்குவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உயர்நீதிமன்ற பெண் ஊழியர் வீட்டில் நகைத் திருட்டு: மதுரை வளர்நகர் அம்மாபட்டியைச் சேர்ந்தவர் ஹிரேன் இசக்கி மனைவி ஜெயந்தி (41). சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் பரமேஸ்வரன், விரகனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். தற்போது பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருவதால், மகன் பள்ளி செல்ல வசதியாக வைகை நகரில் உள்ள ஒரு வீட்டில் தாற்காலிகமாக ஜெயந்தி தங்கி இருந்தாராம். அங்கிருந்து அம்மாபட்டியில் உள்ள வீட்டுக்கு வெள்ளிக்கிழமை அவர் வந்துள்ளார்.
இந்நிலையில் வைகைநகரில் இருந்து பக்கத்து வீட்டுக்காரர் ஜெயந்தியை சனிக்கிழமை தொடர்பு கொண்டு வீட்டின் பூட்டு திறந்து கிடப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து ஜெயந்தி அங்கு சென்று பார்த்த போது, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஜெயந்தி அளித்தப் புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: மதுரை பி.பி.சாவடியைச் சேர்ந்தவர் ராமசாமி (70). கோச்சடையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். உத்தங்குடியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சனிக்கிழமை சென்றாராம். உத்தங்குடி அருகே சென்ற போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில், இவர்களை பின் தொடர்ந்து வந்த இருவர், ராமசாமியின் மனைவி அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து ராமசாமி அளித்தப் புகாரின் பேரில் கோ.புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com