தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தம்பதியர் காலதாமதமாக மேல்முறையீடு: ரூ.50 அபராதத்தை கருவேல மரங்கள் அகற்றும் பணிக்கு செலுத்த உத்தரவு

கௌரவக் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தம்பதியர், காலதாமதமாக மேல் முறையீடு செய்ததற்காக ரூ. 50 அபராதம் விதித்த சென்னை

கௌரவக் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தம்பதியர், காலதாமதமாக மேல் முறையீடு செய்ததற்காக ரூ. 50 அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அத் தொகையை கருவேல மரங்கள் அகற்றும் பணிக்குச் செலுத்துமாறு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
   நெல்லை மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மகள் காவேரி, நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விஸ்வநாதனை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சங்கரநாராயணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
   அவரது எதிர்ப்பை மீறி இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இதற்கு, விஸ்வநாதனின் சகோதரி கல்பனா உடந்தையாக இருந்ததாகக் கருதிய சங்கரநாராயணன், கல்பனாவை 2016 மே மாதம் 13-ஆம் தேதி  கொலை செய்தார். இதில், சங்கரநாராயணன், அவரது மனைவி செல்லம்மாள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், கணவன், மனைவி இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து கடந்த ஜனவரி 1-இல் தீர்ப்பளித்தது.
   இதை எதிர்த்து சங்கரநாராயணன், செல்லம்மாள் இருவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுவை 7 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்தனர். மேலும், தாமதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தனர்.  இந்த மனு, நீதிபதிகள் ஏ. செல்வம், என். ஆதிநாதன் ஆகியோர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்கள் 7 நாள்கள் தாமதமாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததற்காக ரூ.50 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு செலவிடுவதற்காக தொடங்கப்பட்டுள்ள கணக்கில் செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அபராதத் தொகையை பயன்படுத்த ஆலோசனை
    சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு செலவிடுவதற்காக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கியில் தனி சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் செயல்படும் நீதிமன்றங்களில், பல்வேறு வழக்குகளில் மனுதாரர்களுக்கோ, எதிர்மனுதாரர்களுக்கோ அபராதம் விதிக்கும்போது, அந்தத் தொகையை சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் நிதிக்கான வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என, நீதிபதிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com