வண்டல் மண் விநியோகத்தைக் கண்காணிக்க விவசாயிகள் குழு அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published on : 20th May 2017 06:28 AM | அ+அ அ- |
நீர்நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் மண் வழங்கப்படுவதைக் கண்காணிக்கத் தனிக் குழு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடிமராமத்து திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 கண்மாய்கள் தூர் வாரப்படுகின்றன. இவற்றில் கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு, அரசு நிர்ணயித்துள்ள அளவின்படி வழங்கப்படுகிறது. இந்நிலையில், வண்டல் மண் விநியோகத்தைக் கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
வண்டல் மண் இலவசமாக வழங்கப்படுவதால் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு சென்றுவிட வாய்ப்பு உள்ளது. மேலும் குறிப்பிட்ட நபர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக வழங்கிவிடக் கூடும். ஆகவே, தாலுகா அளவில் விவசாயிகளைக் கொண்ட குழுவை அமைத்து வண்டல் மண் விநியோகத்தைக் கண்காணிக்க வேண்டும் என்றனர்.
வண்டல் மண் பெறுவதற்கான நடைமுறைகளை மாவட்ட நிர்வாகம் எளிமைப்படுத்தியுள்ளது. கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்தால் ஒரே நாளில் அனுமதி பெற்றுக் கொள்ள முடியும். வண்டல் மண் விநியோகத்தைக் கண்காணிக்க குழு அமைப்பது குறித்த விவசாயிகளின் கோரிக்கை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். வேளாண் இணை இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.