மறியல்: முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட மார்க்சிஸ்ட் கட்சியினர் 250 பேர் கைது

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 250 வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 250 வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 வறட்சி, மானியம் குறைப்பு, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மதுரை மாநகர் மாவட்டச் செயலர் விஜயராஜன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் என்.நன்மாறன், ஆர்.அண்ணாதுரை, மாநிலக் குழு உறுப்பினர் இரா.ஜோதிராம் உள்பட கட்சியினர் ஏராளமானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
வறட்சியால் ஏற்பட்டிருக்கும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுப்பது, நீர்நிலைகளைத் தூர்வாருவது, ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் பணி நாள்களை 200 நாள்களாக உயர்த்துவது, கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுதல், நியாய விலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
விவசாயக் கடன்களை ரத்துச் செய்ய வலியுறுத்தும் வகையில் விவசாயி ஒருவர் பொம்மை பாம்பை வாயில் கடித்தபடி போராட்டத்தில் பங்கேற்றார். பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் நிலுவை வைத்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா போன்று வேடம் அணிந்த சிறுவனும் போராட்டத்தில் பங்கேற்றார்.
அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே கூடிய கட்சியினர் அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து மறியலில் ஈடுபட்ட 250 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com