அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ரூ.27 லட்சத்தில் பார்வையாளர்கள் தங்கும் கூடம்

மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 27 லட்சம் மதிப்பில் பார்வையாளர் தங்கும் கூடம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.

மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 27 லட்சம் மதிப்பில் பார்வையாளர் தங்கும் கூடம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.
மதுரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு உள்பட 35-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இதில் குழந்தைகள் நல சிகிச்சைத் துறையில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்நோயாளியாக தங்கி சிகிச்சைப் பெறுகின்றன. தினசரி 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிநோயாளிகளாக சிகிச்சைப் பெறுகின்றனர்.
இதில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள குழந்தையிடம் அதிக உறவினர்களை அனுமதித்தால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று அபாயம் உள்ளதால் குழந்தையின் அருகில் தாய் மட்டுமே தங்கியிருக்க அனுமதி வழங்கப்படுகிறது. குழந்தைக்கு தாய் தவிர இதர உறவினர்களின் உதவியும் மருத்துவமனையில் தேவைப்படும் என்பதால் அவர்கள் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு வளாகத்தில் தங்குகின்றனர். அங்கு சிறிய அளவிலான ஷெட் மட்டுமே உள்ளது. அதில் 100-க்கும் மேற்பட்டோர் தங்கும்போது இடநெருக்கடி ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் உறவினர்கள் கடும் குளிரால் அவதிப்பட வேண்டியுள்ளது.
மேலும் தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்டுள்ள குழந்தைகள் உள்நோயாளிகளாக சிகிச்சைப்பெற்று வருவதால் குழந்தைகளின் குடும்பத்தினரும் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். அவர்களும் தங்கும் வசதி இன்றி மழையிலும், குளிரிலும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதையடுத்து குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு வரும் குடும்பத்தினரின் நலனை முன்னிட்டு குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பார்வையாளர்கூடம் கட்டப்பட உள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை டீன்(பொறுப்பு) மருதுபாண்டியன் கூறும்போது, குழந்தைகள் சிகிச்சைப்பிரிவுக்கு நாள்தோறும் பல குழந்தைகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்தச்சூழலில் குழந்தைகளின் குடும்பத்தினர் இருப்பதற்கு போதுமான வசதி இல்லாமல் இருந்தது. இதையடுத்து குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு வளாகத்தில் உள்ள காலி இடத்தில் ரூ.27 லட்சம் மதிப்பில் பார்வையாளர் தங்கும் கூடம் கட்டப்பட உள்ளது. இந்த பார்வையாளர் கூடத்துக்கான நிதியை மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. பார்வையாளர் தங்கும் கூடத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
தற்போது கட்டப்பட உள்ள பார்வையாளர் கூடத்தில் ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கமுடியும். மேலும் குழந்தைகள் வார்டின் பின்பக்கத்தில் உள்ள இடத்தில் குழந்தைகளுக்கான புதிய கழிப்பறையும் கட்டும் பணிகளும் தொடங்கியுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com