ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெயுடன் வந்த 3 பேர் கைது

மதுரை மாவட்ட ஆட்சியர்அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த இரு பெண்கள் உள்பட மூவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர்அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த இரு பெண்கள் உள்பட மூவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்ததையடுத்து மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்.
அதே போல் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற போது, மனு அளிக்க வந்தவர்களை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த முருகானந்தம் மனைவி செல்வி (58), சீனிவாசன் மனைவி ராஜலட்சுமி (34) ஆகிய இருவரும் குளிர்பான பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் வில்லாபுரத்தில் ஏலச்சீட்டு போட்ட நிலையில் பணம் திருப்பித்தரவில்லை என்பதால் தீக்குளிக்கும் எண்ணத்துடன் வந்தததாகத் தெரிவித்தனர்.
இதே போல பைக்காராவைச் சேர்ந்த நடராஜன் (62), அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் பணிக்கொடைத் தராமல் அலைக்கழிப்பதால் தீக்குளிக்கும் எண்ணத்துடன் வந்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க வருபவர்கள் மனுவுடன் மட்டுமே வர வேண்டும். தீக்குளிக்க முயன்றால் புகார் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தவறான எண்ணத்துடன் மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்களைக் கொண்டு வந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களை தூண்டி விடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com