கொள்முதல் செய்ய மறுப்பு: தேங்கும் பிளாஸ்டிக் துகள்களால் மகளிர் குழுவுக்கு நெருக்கடி

அரசை நம்பி பிளாஸ்டிக் கழிவுத் துகள்கள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கிய மகளிர் குழுவினர் அவற்றை கொள்முதல் செய்ய மறுப்பதால் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசை நம்பி பிளாஸ்டிக் கழிவுத் துகள்கள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கிய மகளிர் குழுவினர் அவற்றை கொள்முதல் செய்ய மறுப்பதால் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 மதுரை நாராயணபுரம் பேங்க் காலனியைச் சேர்ந்த மகளிர் குழு கூட்டமைப்பினர் 2012-இல்  ரூ.75 லட்சம் முதலீட்டில் பிளாஸ்டிக் துகள்கள் உற்பத்திக் கூடத்தைத் தொடங்கினர். தார்ச் சாலைகள் அமைக்கும் போது, தாருடன் இந்த பிளாஸ்டிக் துகள்களைச் சேர்த்து பயன்படுத்தினால்  உறுதித் தன்மை அதிகமாக இருக்கும் என்பதால், பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் அமைக்க அரசால் அறிவுறுத்தப்பட்டது.
 இதன்படி,  ஊரக வளர்ச்சி முகமை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மகளிர் குழுவிடம் இருந்து பிளாஸ்டிக் துகள்களைக் கொள்முதல் செய்து வந்தன. பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ ரூ.6 முதல் ரூ.8 வரை விலைக்கு வாங்கி அவற்றை இயந்திரம் மூலமாக துகள்களாக்கி 50 கிலோ எடையுள்ள கட்டுகளாக விற்பனைக்குத் தயாராகிறது.
 தொடக்கத்தில் மதுரை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி முகமை மூலமாக மாவட்டத்தின் 13 வட்டாரங்களிலும் அமைக்கப்படும் தார்ச் சாலைகளுக்கு பிளாஸ்டிக் துகள்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. 
கடந்த 6 மாதங்களாக  பிளாஸ்டிக் துகள்கள் கொள்முதல் செய்வதை உள்ளாட்சி அமைப்புகள் நிறுத்தி விட்டன. இதனால்,  
மகளிர் குழுவினரின் தொழிற்கூடம் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
 இப்பிரச்னை குறித்து மகளிர் குழு கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். அவர்கள் கூறியது: 
கடந்த 6 மாதங்களாக அரசுத் துறைகளில் பிளாஸ்டிக் துகள்கள் கொள்முதல் செய்யப்படாததால் ஏறத்தாழ 7 டன்களுக்கு மேல் தேங்கிவிட்டது. 
இதனால் உற்பத்தியை நிறுத்தியுள்ளோம். இதேநிலை நீடித்தால் கடும் நெருக்கடிக்கு ஆளாகிவிடுவோம். பல்வேறு இடங்களிலும் தார்ச் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும், சாலைப் பணி நடக்கவில்லை எனக் கூறி பிளாஸ்டிக் துகள்கள் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். 
ஆகவே, பிளாஸ்டிக் துகள்களை கொள்முதல் செய்யுமாறு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com