போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 2,575 ஓட்டுநர்களின் உரிமம் தாற்காலிக ரத்து: மாநகரக் காவல் ஆணையர்  மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

மதுரை நகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 2,575 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்கள் தாற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். 

மதுரை நகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 2,575 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்கள் தாற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். 
மதுரை நகரில் உள்ள காவல் நிலையங்களில் கேட்பாரற்று இருந்த இருசக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இருசக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: 
மதுரை மாநகரக் காவல்துறையில் உரிமை கோரப்படாத 520 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கடந்த இருமாதங்களுக்கு முன் பொது ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு ரூ. 15 லட்சம் வருவாய் கிடைத்தது. இதையடுத்து மதுரை நகரில் உள்ள 21 காவல் நிலையங்களிலும் இருந்த 1,525 வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன.  இந்த வாகனங்களின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி 125 வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்தனர்.  அதில் 83 பேரிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன. மேலும் வட்டாரப் போக்குவரத்துத் துறை இணையதளம் மூலம் 600 வாகன ஓட்டுநர்களின் முகவரி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 161 பேருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் போலீஸாரை அணுகினால் அவர்களின் வாகனம் ஒப்படைக்கப்படும். 
மதுரை நகரில் செல்லிடப்பேசி பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் செல்லிடப்பேசி பறிப்புச் சம்பவங்களைத் தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினரின் விசாரணையில் செல்லிடப்பேசி பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட 34  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கல்லூரி மாணவர்கள்.
தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ரௌடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கடந்த 1 வாரத்தில் மட்டும் 81 பேர் ரௌடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் நடவடிக்கைகளால் நகரில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. தொடர் குற்றங்கள் நடைபெறும் பகுதிகள் தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
 நகரில் குடியிருப்புப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது தொடர்பாக குடியிருப்போர் நலச் சங்கங்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால், இரவு ரோந்தின்போது போலீஸார் வீடுகளை கண்காணிப்பார்கள். இதனால் திருட்டு தடுக்கப்படும்.
 மதுரையில் தினசரி 1,500 பேர் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் செல்லிடப்பேசியில்  பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவது, சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுவது, சிக்னலை மீறுவது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக 5,465  வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் 2,575 வாகன ஓட்டுநர்களின் உரிமங்கள் 6 மாத காலத்திற்கு தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 
பள்ளி, கல்லூரிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக பிரசாரம் செய்யப்படுகிறது. இதுவரை 75 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
துணை ஆணையர்கள் சசிமோகன் (சட்டம் ஒழுங்கு), ஜெயந்தி (குற்றப்பிரிவு), ஈஸ்வரன்( ஆயுதப்படை),  கூடுதல் துணை ஆணையர் முருகேஷ் மற்றும் உதவி ஆணையர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com