டெங்கு கொசு: பெட்டிக்கடைக்கு ரூ.2,000 அபராதம்
By DIN | Published on : 15th November 2017 08:24 AM | அ+அ அ- |
மதுரையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில்தண்ணீரை வைத்திருந்ததாக பெட்டிக்கடைக்கு மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் ரூ.2,000 அபராதம் விதித்தார்.
மதுரை அண்ணா பேருந்து நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை அதிகாரிகளுடன்சென்று ஆணையர் ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள தேநீர், பெட்டிக்கடைகள் மற்றும் தனியார் உணவகங்கள், தங்கும் விடுதிகளை பார்வையிட்டு, அங்குடெங்கு கொசு உற்பத்திக்கான வாய்ப்புகள் உள்ளதா என ஆய்வு செய்தனர். இதில், பெரும்பாலான கடைகளில் பிடித்துவைத்திருந்த தண்ணீரில் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகியிருந்தது தெரியவந்தது. பெட்டிக் கடைஒன்றில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீர் முழுதும் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அக்கடைக்கு ரூ.2000 அபராதம் விதிக்க சுகாதாரத்துறையினருக்கு ஆணையர் உத்தரவிட்டார்.பேருந்து நிலையத்தில் இருந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையில் தேவையற்ற பொருள்கள் குவிக்கப்பட்டிருந்ததை அகற்ற ஆணையர் உத்தரவிட்டார். மேலமடைப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டட மேற்பரப்பில் மழை நீர் தேங்கியிருந்ததைக் கண்ட ஆணையர், அதை அகற்றுமாறு கட்டட உரிமையாளரிடம் அறிவுறுத்தினார். அப்பகுதியில் மாநகராட்சி பொது குடிநீர் குழாய்களில் மக்கள் பிடித்த தண்ணீரில் உள்ள குளோரின் அளவையும் சரிபார்த்தார். ஆய்வின் போது மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் டாக்டர் கே.பார்த்திபன், கண்காணிப்புப் பொறியாளர் சுகந்தி, உதவி ஆணையர் பழனிச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குறைதீர்க்கும் முகாம்: மதுரை மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ஆணையர் மனுக்களைப் பெற்றார். அவரிடம் 22 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணையர் உத்தரவிட்டதுடன், ஏற்கெனவே முகாம்களில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் உதவி ஆணையரிடம் விசாரித்தார். முகாமில் மாநகராட்சி துணை ஆணையர் ப.மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.