715 காலிப் பணியிடங்களுக்கு ஓய்வு பெற்றவர்களை தேர்வு செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு: அதிருப்தியில் தொழிற்சங்கங்கள்

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டத்தில் உள்ள 715 காலியிடங்களுக்கு ஓய்வு பெற்ற பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற ரயில்வே நிர்வாகத்தின்

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டத்தில் உள்ள 715 காலியிடங்களுக்கு ஓய்வு பெற்ற பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்புக்கு ரயில்வே தொழிற்சங்கத்தினர் அதிருப்தி  தெரிவித்துள்ளனர்.
 நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரயில் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு பணியாளர் தட்டுப்பாடு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியா முழுவதும் ரயில்வே துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளின் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொத்தம் 20 பிரிவுகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு தாற்காலிக பணியாட்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு அந்தந்த பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் பின்பற்றி தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டத்தில் உள்ள 715 காலிப் பணியிடங்களுக்கு ஓய்வுபெற்ற பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நவம்பர் 11ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.  அதில், ஒவ்வொரு பிரிவிலும் உள்ள காலிப் பணியிடங்கள், அதற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்புப் பிரிவின் கீழ் வரும் தண்டவாளப் பராமரிப்பாளர், இளநிலை பொறியாளர், நிலைய மேலாளர், கார்டுகள், நிலைய கட்டுப்பாட்டு அலுவலர்கள், சிக்னல் உதவியாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் ஓய்வுபெற்ற பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய பணிகளுக்கான தேர்வை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் 2018 செப்டம்பர் மாதம் நடத்த உள்ளது.
 இந்நிலையில், ஓய்வுபெற்ற பணியாளர்களை வைத்து காலிப் பணியிடங்களை நிரப்பி, பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், மற்றப் பிரிவுகளை விட அதிக கவனம் செலுத்த வேண்டிய பாதுகாப்பு பிரிவுக்கும் ஓய்வுபெற்ற ஆட்களை நியமிப்பது முறையல்ல என்றும் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக டிஆர்இயூ (தட்சிண ரயில்வே பணியாளர் சங்க) நிர்வாகி சங்கர நாராயணன் கூறியது: கடந்த சில ஆண்டுகளாகவே ரயில்வே துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு தேர்வு வைத்து தகுதியான நபரைத் தேர்வு செய்யாமல், ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் ஆட்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். அவ்வாறு ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் தங்கள் லாபத்திற்காக குறைந்த ஊதியத்திற்கு வயதான ஆட்களை நியமிக்கின்றனர். இதனால் பணியில் பின்னடைவு ஏற்படுவதோடு, அப்பணிக்கு தகுதியான இளைஞர்களின் வேலைவாய்ப்பும் பறிக்கப்படுகிறது.
ரயில்வே துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கும் ஏற்றவாறு பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவு திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பை வெகுவாக பாதிக்கும். ரயில்வே விபத்துக்கள் ஏற்படுவதற்கு பாதுகாப்பு பிரிவில் ஏற்படும் சிறு தவறுகளே காரணம். இந்நிலையில் அப்பிரிவுக்கு தகுதியான இளைஞர்களை நியமிப்பதே முறையானது.
மேலும்,   இந்த தாற்காலிக பணியில் சேருவோருக்கு அவர்கள் பணியில் இருக்கும் காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்படாது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணியில் சேரும் ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களும் பாதிக்கப்படும் என்றார்.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவு தாற்காலிகமானதே. அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரிவுகளுக்காக தகுதியான நபர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2018 ஆம் ஆண்டு தேர்வு நடத்த உள்ளது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு பயிற்சி அளித்து, பின்னர் அவர்கள் பணியில் சேர்வதற்கு குறைந்தது 7 மாதங்கள் முதல் ஓராண்டாகும். இந்த இடைப்பட்ட காலங்களில் ரயில்வே துறையின் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த தாற்காலிக முடிவை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது.
மேலும்,  அனைத்துப் பிரிவுகளுக்கும் தேர்வு செய்யப்படும் முன்னாள் ஊழியர்கள் முழு உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். இதனால் பாதுகாப்பு பிரிவின் பணிகளில் எவ்வித இடையூறும் ஏற்படாது. எதிர்காலத்தில் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுவர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com