நீர் வரத்துக் கால்வாய்களில் ஆக்கிரமிப்பை அகற்ற குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் பகுதியில் கண்மாய் நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பரங்குன்றம் பகுதியில் கண்மாய் நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
   திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் தங்கமீனா தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் தனசேகரன், துணை வாட்டாட்சியர் செந்தாமரை வள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   இக்கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.
தென்பழஞ்சி சிவராமன்: மாவிலிபட்டி கண்மாய்வரை வைகை அணையிலிருந்து தண்ணீர் வருகிறது. அங்கிருந்து சுமார் 750 மீட்டர் தொலைவில் உள்ள தென்பழஞ்சி கண்மாய்க்கு வரும் வாய்க்காலை சீரமைத்தால் வைகை நீர் தென்பழஞ்சி கண்மாய்க்கு வரும். எனவே நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்றார்.
தனக்கன்குளம் செல்லக்கண்ணு: தனக்கன்குளம் பெரிய கண்மாய் மடையும், மழைநீர் வரும் கால்வாயும் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளைஅகற்றவேண்டும்.
வேடர்புளியங்குளம் செந்தில்குமார்: கால்வாய் ஆக்கிரமிப்பு, கண்மாய் தூர்வாருதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்றார்.
   இது போன்று பேருந்து வசதி மற்றும் குடிநீர் பிரச்னை தொடர்பாகவும் விவசாயிகள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.  மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு விவசாயிகளின் கோரிக்கைகளை கொண்டு சென்று  உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் வேளாண்மை, பொதுப்பணி, போக்குவரத்து துறையினர், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com