பழனி அருகே கி.பி.18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்தூண், மாலைத்தூண், கைத்தடி கண்டெடுப்பு

பழனியருகே எலையமுத்தூரில் கி.பி.18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  கல்தூண், மாலைக்கோயில் மரத்தூண், கைத்தடி ஆகியன கண்டறியப்பட்டது.

பழனியருகே எலையமுத்தூரில் கி.பி.18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  கல்தூண், மாலைக்கோயில் மரத்தூண், கைத்தடி ஆகியன கண்டறியப்பட்டது.

திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது எலையமுத்தூர் கிராமமாகும்.  இது திண்டுக்கல் மாவட்டத்துக்கும், திருப்பூர் மாவட்டத்துக்கும் எல்லை கடைசியில் அமைந்துள்ளது.  இந்த ஊரை சேர்ந்த சின்னன் கண்ணன் என்பவர் தோட்டத்தில் உழவுப்பணியின் போது பழங்கால கல் மற்றும் மரத்தால் ஆன தூண்களையும், கைத்தடியையும் கடந்த மாதம் கண்டெடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி அங்கு மேற்கொண்ட ஆய்வில் அவர் தெரிவித்ததாவது:  கல்லில் கல்வெட்டில் கலியுக சகாப்தம் 4869 ஆம் ஆண்டு, விரோதிகிரி ஆண்டு, கார்த்திகை மாதம் 30ம் நாள், திங்கள்கிழமை, ரோகிணி நட்சத்திரம், திரிதிகை, ரிசப லக்கினத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டதாக தெரியவருகிறது.  இதன் இணையான ஆங்கில ஆண்டு கி.பி.1768 ஆகும்.  

தளிஞ்சியை சேர்ந்த குறுநில மன்னனும், குப்ப நாகைய நாயக்கனின் பேரனும், பரஞ்சோதி நாகைய நாயக்கனின் மகனுமான குப்ப நாகைய நாயக்கனின் நினைவாக இந்த மாலைக்கோயில் தூணை பசுபதி பாலப்ப நாயக்கன், பட்டுதுறை முத்தைய நாயக்கன், சின்னப்பெத்தய நாயக்கன் ஆகிய மூன்று பேரும் சேர்த்து எழுப்பி வழிபட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டு தளிஞ்சியை வராகமலை(பன்றிமலை) என்றும், எலையமுத்தூர் தளிஞ்சி ஆட்சிக்கு உட்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தளிஞ்சியை நாயக்கமன்னர்கள் ஆட்சி செய்ததற்கான ஆதாரங்கள் ஏராளமான இன்றளவும் உள்ளது.

மாலைகோயில் என்பது குறுநில மன்னர்கள் இறந்த பின்பு அவர்கள் நினைவாக எழுப்பப்படும் தூண்கள் மற்றும் கல்லறைக்கோயில்களை குறிக்கும். எலையமுத்தூரில் கிடைத்த கல்வெட்டு குறிப்பிடும் மாலைக்கோயில் தளிஞ்சியை ஆண்டகுறுநில நாயக்க மன்னர்களின் நினைவாக எழுப்பப்பட்ட இரண்டு மரத்தூண்களை குறிக்கிறது.  இந்த மரத்தூண்கள் கோவை மண்டலத்திலும், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் உள்ளது. 

மரத்தூண்கள் சுமார் 200 ஆண்டுகள் மண்ணில் புதையுண்டு இருந்தாலும் ஏழு அடி உயரத்தில் உள்ள அதில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் பாதிப்பின்றி உள்ளது. சிலபகுதிகளை கரையான் அரித்துள்ளது.

இரண்டு தூண்களிலும் 72 பகுதிகளாக 323 சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் காலங்களில் போர்க்காட்சிகள், பல்லக்கு உலாக்கள், வாழ்வியல் நிகழ்ச்சிகள் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. மண்ணில் புதையுண்டு மீட்கப்பட்ட இந்த சிற்பங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது பலரது கோரிக்கையாகும்.  

ஆய்வின் போது ராஜலிங்கம், திருவேங்கடம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com