ஊழலற்ற நிர்வாகம் வழங்கவே தமிழக அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை: எச்.ராஜா பேட்டி

தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதற்காகவே ஆளுநர் அதிகாரிகளிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் என, பாஜக தேசியச் செயலர் எச். ராஜா கூறினார்.

தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதற்காகவே ஆளுநர் அதிகாரிகளிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் என, பாஜக தேசியச் செயலர் எச். ராஜா கூறினார்.
       மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது:  ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் குறிப்பிட்ட குடும்பத்தின் பிடியிலிருந்து அதிமுகவை மீட்கவே அக்கட்சியினர் போராடி வருகின்றனர். எனவே, தமிழகத்தில் நடந்துவரும் வருமானவரிச் சோதனைக்கும், மத்திய அரசு மற்றும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை.  
      உறுதியான தகவல் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் நீட்சியாகவே, போயஸ் தோட்டத்திலும் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இச் சோதனையை வைத்து அனுதாபம் தேடுவது சரியல்ல. சோதனை குறித்து வணிகவரித் துறை அறிக்கை வெளியிட்டாலே முழு உண்மை தெரியவரும். 
      எனவே, தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளஅனைத்து வருமான வரிச் சோதனையிலும் காலந் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். 
      ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த புகார் எழுப்பி பல  ஆண்டுகளுக்குப் பிறகே அந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது. 
     கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் படுகொலை குறித்து அந்த மாநில முதல்வரை அழைத்து, ஆளுநர் சதாசிவம் விளக்கம் கேட்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் சட்டம் தெரிந்தவர். மக்கள் பிரதிநிதியாக இருந்தவர். அவரது நடவடிக்கையை திமுக குறைகூறுவது சரியல்ல.
     தமிழகத்தில் அனைத்துத் துறையிலும் ஊழல் அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கழிப்பறை கட்டுவது, இலவச வேட்டி, சேலை வழங்குவது போன்றவற்றில் முறைகேடு நடந்திருப்பது குறித்து எனது கவனத்துக்கு வந்தது. இதுபோன்ற முறைகேடுகள் ஆளுநர் கவனத்துக்கும் சென்றிருக்கும் என்பதால், அது குறித்து மாநில அரசை எச்சரிக்கவும்,  ஊழலற்ற நிர்வாகத்துக்கான ஆலோசனை வழங்கவும் அவர் கோவையில் அதிகாரிகளிடம் ஆலோசனை  நடத்தியிருக்கலாம். அவர் உத்தரவு பிறப்பித்திருந்தாலே குறைகூற முடியும். ஆளுநரின்ஆலோசனையை குறைகூறுவது சிறுபிள்ளைத்தனமானது என்றார்.     
      பேட்டியின்போது, பாஜக மாநிலச் செயலர் பேராசிரியர் ஆர். ஸ்ரீநிவாசன், மதுரை மாநகர் மாவட்டச் செயலர் சசிராமன்,  நிர்வாகிகள் ஹரிகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com