"ஒற்றுமையுடன் போராடினால் மட்டுமே உழைக்கும் மக்களுக்கு விடுதலை'

ஒற்றுமையுடன் கூடிய போராட்டமே உழைக்கும் மக்களை விடுவிக்கும் என்று, சிஐடியூ அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் தெரிவித்தார்.

ஒற்றுமையுடன் கூடிய போராட்டமே உழைக்கும் மக்களை விடுவிக்கும் என்று, சிஐடியூ அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் தெரிவித்தார்.
அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் 13- ஆவது அகில இந்திய மாநாடு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.  இதில், அகில இந்தியத் தலைவர் ராஜீவன் கொடியேற்றி தலைமை வகித்தார். 
மாநாட்டை  தொடக்கி வைத்து, சிஐடியூ அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் பேசியதாவது:  
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, தொழிலாளி வர்க்கம் மீது பொருளாதாரம், அரசியல், தத்துவார்த்தம், அமைப்பு  என நான்குமுனைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் விதத்திலும், தொழிலாளர்களின் உரிமைகளை ஒழிக்கும் விதத்திலும், பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. 
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைக்குப் பிறகு குறைந்தபட்சக் கூலியை ரூ.18 ஆயிரமாக உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தோம். அரசுத் தரப்பில் குறைந்தபட்சக் கூலி ஒரு தொழிலாளிக்கு ரூ.18 ஆயிரம் தேவையா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. தற்போது, குறைந்தபட்சக் கூலி மட்டுமல்ல, அடிப்படையிலேயே சங்கம் அமைக்கும் உரிமையும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சங்கம் அமைக்கும் தொழிலாளர்களை பழிவாங்கும் விதத்தில் புதிய விதிகள் புகுத்தப்படுகின்றன. 
ஒருபுறம் தொழிலாளர்களின் நலன் காக்கும் சட்டங்களையும், விதிகளையும் சீர்குலைக்கும் பாஜக அரசு, மறுபுறம் பெரு முதலாளிகளுக்கு சாதகமாக சட்டத் திருத்தங்களை கொண்டு வருகிறது. 
இத்தகைய பின்னணியில் ஒவ்வொரு துறையிலும் செயல்படுகின்ற தொழிற் சங்கத்தின் பங்கு மிக மிக முக்கியமானதாக மாறியிருக்கிறது. எனவே, தொழிலாளர், விவசாயிகள்  ஒன்றுபட வேண்டும். அத்தகைய ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் ஒற்றுமையை உருவாக்குவது தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும். 
ஒற்றுமையுடன் கூடிய போராட்டங்களே  உழைக்கும் மக்களை விடுவிக்கும் என்றார்.
மாநாட்டில்  பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா,  பத்திரிகையாளர் விஜயசங்கர், வங்கி ஊழியர் சங்கப் பொதுச் செயலர் பிரதீப் பிஸ்வாஸ், அகில இந்திய பொதுச்செயலர் ஏ. சயீதுகான்,  பாண்டியன் கிராம வங்கித் தலைவர் ரவிச்சந்திரன்,  பல்லவன் கிராம வங்கிப் பொதுமேலாளர் சந்தோஷ் குமார், புதுவை பாரதியார் கிராம வங்கித் தலைவர் மனோரஞ்சன் சாஹூ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் என 1,800 பேர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டையொட்டி,  மதுரை உலக தமிழ்ச் சங்கக் கட்டடம் முன்பிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com