மனதில் தீய எண்ணங்கள் எழும்போதுதான் மனிதர்கள் ஒழுக்கம் தவறுகின்றனர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மனதில் தீய எண்ணங்கள் எழும்போதுதான் மனிதர்கள் ஒழுக்கம் தவறுகின்றனர் என்று, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

மனதில் தீய எண்ணங்கள் எழும்போதுதான் மனிதர்கள் ஒழுக்கம் தவறுகின்றனர் என்று, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
      மதுரை தமுக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் அமைப்பின் 80 ஆவது ஆண்டு ஆன்மிகத் திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர் மேலும் பேசியதாவது:
      பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் அமைப்பினர் 80 ஆண்டுகளாக சிறப்பான சேவையை செய்து வருகின்றனர். மனிதனுக்கு தேவை பணமோ, புகழோ அல்ல மன அமைதிதான். இந்த உண்மையை உணர சில காலம் ஆகும். மனிதர்கள் நிம்மதியைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். எல்லா பணியிலும் ஒருவித அவசரம் தொற்றிக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
      திங்கள்கிழமை வந்துவிட்டால் அலுவலகப் பணிகள் உள்ளிட்டவற்றை நினைத்து மனிதர்கள் மனதில் ஒருவித பயம் ஆட்கொள்கிறது. இது நாளடைவில் மனச்சிதைவு நோயாக மாறக்கூடும்.
     மனிதர்கள் மனதில் தீய எண்ணங்கள் எழும்போதுதான் ஒழுக்கம் தவறுகின்றனர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்க இதுவே காரணம்.
    எனவே, மனிதர்கள் மனதை ஒருமுகப்படுத்துதல் அவசியம். தியானம் அதற்கு மிகவும் உதவுகிறது. தியானம் என்பது மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்தும் மிகப்பெரிய கலை. அதை அனைவரும் பயிற்சி செய்வது அவசியம் என்றார்.
    முன்னதாக, பிரம்மா குமாரிகள் அமைப்பின் மஹாராஷ்டிரம் மற்றும் ஆந்திர பிரதேச மண்டலங்களின் இயக்குநர் பிரம்மா குமாரி சந்தோஷ் தீதிஜி பேசியதாவது:
    தொழில்நுட்ப வசதிகளின் பெருக்கத்தின் காரணமாக தொலைவில் இருப்பவர்களிடம் நேரடியாக பேசும் வசதிகள் அதிகரித்துள்ளன. இது, ஒரு வகையில் நல்ல முன்னேற்றம்தான். ஆனால், அருகில் இருப்பவர்கள், குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. அன்பை பரிமாறிக்கொள்ளும் போக்கு குறைந்து வருவது ஆரோக்கியமானதல்ல.
     இந்நிலை மாறவேண்டும் என்றால், இயற்கையை நேசிக்கும் பழக்கத்தை மக்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். மனிதர்களிடமும், விலங்குகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இறைவன் என்பவர் ஞானக்கடல். அதை அடைய தியானமே சிறந்த வழி என்பதை அனைவரும் உணரவேண்டும் என்றார்.
    இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர், பிரம்மா குமாரிகள் அமைப்பின் மதுரை மண்டல துணை இயக்குநர் பி.கு. மீனாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புகள் தேடிவரும்: அமைச்சர்
      பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ்  தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.கே. போஸ், வி.வி. ராஜன்செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    நிகழ்ச்சியில், இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியது: 
    தற்போது, உலகம் வளர்ந்து வருவதற்கேற்ப அனைத்து துறைகளிலும் போட்டிகள் நிறைந்துவிட்டன. அந்தப் போட்டிகளை சமாளிக்க இளைஞர்கள் தங்களது தனிதிறமைகளை வளர்த்துக் கொண்டால்தான் வேலை வாய்ப்புகள் தேடிவரும். 
      திறமையும், தகுதியும் இருப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்றார். 
    வேலை வாய்ப்பு முகாமில் 78  நிறுவனங்களிலிருந்து 510 பேர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 
    நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம், அரசு வழக்குரைஞர் எம். ரமேஷ், மன்னர் கல்லூரி முதல்வர் த. நேரு, தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் ஐ. மகாராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக,  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் வெ. சுப்பிரமணியன் வரவேற்றார்.
     பின்னர், செய்தியாளர்களிடையே அமைச்சர் கூறுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனையிட்டது வேதனைஅளிக்கக்கூடிய நிகழ்வு. அதிமுகவினர் அனைவருக்கும் அது கோயில். அதனை, தமிழக அரசு நினைவு இல்லமாக்க  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com