குற்றச் செய்திகள்

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
மதுரையில் பூட்டிய வீட்டில் 2 பவுன் நகை, முக்கால் கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர்.
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச்  சேர்ந்தவர் பூமிநாதன் (54).  இவர் கடந்த ஆக.23-ஆம் தேதி வீட்டைப்பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். அங்கிருந்து வீட்டுக்கு திங்கள்கிழமை வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டின் அலமாரியில் இருந்து முக்கால் கிலோ வெள்ளிப்பொருள்கள், பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.  பூமிநாதன் அளித்தப்புகாரின்பேரில் சுப்ரமணியபுரம் போலீஸார்  விசாரித்து வருகின்றனர்.

சட்டவிரோத பட்டாசு விற்பனை: தந்தை-மகன்  கைது
மதுரையில் அனுமதியின்றி பட்டாசு விற்ற இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
மதுரை கூடல்நகர் விஸ்வநாதபுரம் விரிவாக்கப் பகுதியை சேர்ந்தவர் சின்ன மகாராஜன். இவரும், இவருடைய மகன் பிரபாகரனும் அனுமதியின்றி பட்டாசுக்  கடை நடத்தி வருவதாக கூடல்நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அவர்கள் வீட்டுக்குச்சென்று சோதனையிட்டனர். இதில் அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை மொத்தமாக வாங்கி வைத்து நேரிலும், இணையதளம், கட்செவி அஞ்சல் ஆகியவற்றின் மூலமாகவும் சட்ட விரோதமாக விற்றது தெரிந்தது.  இருவரையும் போலீஸார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

காரில் மடிக்கணினிகள் திருடியவர் கைது
மதுரையில் காரில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினிகளை திருடிச்சென்ற இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனர்.     
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(35).  தனியார் நிறுவன அதிகாரியான இவர் அக்.5-இல் மேலமாரட் வீதியில் உள்ள வங்கிக்குச் சென்றார். அப்போது காரை நிறுத்தி விட்டு வங்கிக்குச் சென்றுள்ளார். இதில் காரில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 2 மடிக்கணினிகளை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்று விட்டார். சம்பவம் தொடர்பாக பிரவீன்குமார் அளித்தப் புகாரின்பேரில் திடீர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த ராஜாராம் மடிக்கணினியைத் திருடிச்சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீஸார் ராஜாராமை கைது செய்து அவரிடம் இருந்து மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனர்.

தங்கும் விடுதி ஊழியர் தவறி விழுந்து சாவு
மதுரையில் தனியார் தங்கும் விடுதி ஊழியர், விடுதி மேல்தளத்தில் இருந்து திங்கள்கிழமை தவறி விழுந்து இறந்தார்.
மதுரை கோ.புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் காந்திநாதன் (40).  மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விடுதியில் திங்கள்கிழமை பணியில் இருந்தபோது மேல்தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவம் தொடர்பாக காந்திநாதனின் குடும்பத்தினர் அளித்தப்புகாரின்பேரில் திடீர்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com