காந்தியை "மகாத்மா'வாக மாற்றிய மதுரை கட்டடம் நினைவில்லம் ஆகுமா?

காந்தியடிகளை மகாத்மாவாக மாற்றிய பெருமைக்குரிய மதுரை மேலமாசி வீதி கட்டடம் நினைவில்லம் ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காந்தியடிகளை மகாத்மாவாக மாற்றிய பெருமைக்குரிய மதுரை மேலமாசி வீதி கட்டடம் நினைவில்லம் ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காந்தியடிகள் மதுரைக்கு 5 முறை வந்துள்ளார். அவர் மதுரைக்கு முதன்முறையாக 1919 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி வருகை தந்தார். அப்போது வைகையாற்று வடகரையில் அமைந்திருந்த தியாகி ஜார்ஜ் ஜோசப் வீட்டில் தங்கினார்.  இரண்டாவது முறையாக காந்தியடிகள் 1921 செப்டம்பரில் வந்தார்.  அப்போது அவர் நவநாகரீக உடையிலே காட்சியளித்தார்.  மதுரை மேலமாசி வீதியில் உள்ள குஜராத் தொழிலதிபர் வீட்டில் தங்கிய காந்தியடிகள் திடீரென தனது வழக்கமான உடையை மாற்றி வேட்டி மற்றும் சட்டை அணியாத நிலைக்கு மாறினார்.
இந்திய ஏழை விவசாயிகளைப் போலவே தானும்  அரையாடைக் கோலத்துக்கு மாறியதாக கூறிய காந்தியடிகள்,  அவர்களின்  நிலை மாறும் வரை தனது அரையாடைக் கோலத்தை மாற்றப்போவதில்லை என்றும் கூறினார்.
1921 செப்டம்பர் 22 ஆம் தேதி மதுரை மேலமாசி வீதியில் ஆடை மாற்றம் கண்ட  காந்தியடிகள் அன்று மாலையில் தற்போதைய காமராஜர் சாலை காந்திப் பொட்டலில் நடந்த பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார்.  அதுவரை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாகவே அவரை பார்த்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் அன்றிலிருந்து அவரை மகாத்மாவாக அழைக்கத் தொடங்கினர்.   அதன் பின்னர் காந்தியடிகள் மதுரைக்கு 1927, 1934 மற்றும் கடைசியாக 1946 ஆகிய மூன்றுமுறை வந்துசென்றுள்ளார்.  அவர் பலமுறை மதுரை வந்தபோதும், மேலமாசி வீதியில் தனது ஆடைக் கோலத்தை மாற்றிய நிகழ்வே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியத்துவம் வாயந்ததாகக் கருதப்படுகிறது.  காந்தியடிகள் அரையாடைக் கோலத்துக்கு மாறிய கட்டடம் தனியாருக்குச் சொந்தமானது என்பதால் அதை வேறு ஒருவருக்கு விற்க முயற்சி நடந்தது. ஆனால்,  கதர்கிராமத் தொழில் வாரியம் சார்பில் 1954 ஆம் ஆண்டு அந்தக்கட்டடம் வாங்கப்பட்டது.  அதுமுதல் அங்கு காதி பொருள்கள் விற்பனைமையம் செயல்படுகிறது.
காந்தியடிகள் அரையாடை கோலத்துக்கு மாறிய இடத்தை அவரது நினைவில்லமாக்க காந்தியவாதிகள் நீண்ட காலமாக கோரிவருகின்றனர்.  இந்தநிலையில், காந்தியடிகள் அரையாடை கோலத்திற்கு மாறிய கட்டடத்தை புதுப்பிக்கவும், அதை நினைவில்லமாக்கவும் ரூ.85 லட்சம் நிதியில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக  கடந்த ஆண்டு தமிழ்நாடு கதர்கிராமத் தொழில் துறை சார்பில் அறிவிப்பு வெளியானது.  ஆனால், இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
மத்திய அரசின் பொலிவுறு நகரத்திட்டத்தில் மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் மற்றும் அதைச்சுற்றிலும் 4 மாசி மற்றும் வெளி வீதிகளும் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால்,  காந்தியடிகள் ஆடைமாற்றிய அக்கட்டட சீரமைப்பு குறித்து பொலிவுறு நகரத்திட்டத்திலும்  அறிவிப்பு இல்லை.
காந்தியடிகள் ஆடை மாற்றிய வரலாற்று முக்கியத்துவ நிகழ்வை வருங்காலத் தலைமுறை அறிவது அவசியம். ஆகவே அக்கட்டடம் முன்பு முறைப்படி  அறிவிப்பு வைத்தும், அதில் காந்தியடிகள் ஆடை மாற்றிய நிகழ்வின் முக்கியத்துவத்தை எழுதி வைக்கவேண்டும் என்கிறார்கள் காந்தியவாதிகள்.
இதுகுறித்து தமிழ்நாடு கதர்கிராமத் தொழில்கள் வாரிய மதுரை அதிகாரிகள் கூறியது:    மேலமாசி வீதி காதிகிராப்ட் கட்டடம் மிகப்பழமையானதாகும். அதில் கீழ்தளத்தில் காதிகிராப்ட் பொருள் விற்பனையகமும், மேல் தளத்தில் காந்தியடிகள் சிலை மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.  
காந்தி ஜயந்தி உள்ளிட்ட முக்கிய நாள்களில் இங்கு  நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.  தற்போது  கட்டடத்தை சீரமைத்து, காந்தியடிகள் நினைவு புகைப்படம் உள்ளிட்டவற்றை வைத்து அனைவரும் வந்து பார்க்கும் வகையில் சீரமைக்க அரசுக்கு  கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது  என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com