கால மாற்றத்தில் தமிழரை அடையாளப்படுத்துவது தமிழே! முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்

கால மாற்றத்தில் தமிழர்களை அடையாளப்படுத்துவதாக தமிழ் மொழியே உள்ளது என, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார்.

கால மாற்றத்தில் தமிழர்களை அடையாளப்படுத்துவதாக தமிழ் மொழியே உள்ளது என, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார்.
       மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆட்சிமொழிப் பயிலரங்கம் உலகத் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.     மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தலைமை வகித்தார். உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் கா.மு. சேகர் முன்னிலை வகித்தார்.
    இதில், வைகைச் செல்வன் ஆற்றிய சிறப்புரை: கடம்பவனம், மூதூர் என பல பெருமைகளைப் பெற்ற நகர் மதுரை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியதாகவும், மகாத்மா காந்தியை அரையாடை கோலத்துக்கு மாற்றிய பெருமைக்குரியதாகவும் மதுரை திகழ்கிறது.
     தமிழைப் போல ஒரு பொருளுக்கு பல சொற்கள் உள்ள மொழி வேறு இல்லை.  ஆனால், நக்கீரர் வளர்த்த தமிழ் மொழி இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை அறியும்போது வேதனையே ஏற்படுகிறது. கால மாற்றத்துக்கேற்ப தமிழையும் மாற்றியிருக்கிறோம்.
   தாய்மொழியாம் தமிழை நாம் நேசிக்கவேண்டும். கால மாற்றத்திலும் கூட தமிழரை ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து சிந்திக்க வைத்து இணைப்பது தமிழ் மொழிதான்.
    திராவிட மொழிகளாம் கன்னடம், மலையாளம், துளுவத்தில் தமிழே தாய்மொழியாக உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளானாலும் உயிர்ப்புடன் தமிழ் மொழி இருப்பதற்கு அதன் கட்டமைப்பே காரணமாகும்.
    உலக அளவில் பேச்சு, எழுத்தில் அடையாளம் இழக்காத செவ்வியல் மொழியாக தமிழ் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடவுள் மொழி எனக் கூறப்படும் சமஸ்கிருதம் கூட தற்போது பேச்சு வழக்கில் இல்லை. பாரம்பரியமான நமது தாய்மொழியாம் தமிழை காப்பது நமது கடமை என்றார்.
    நிகழ்ச்சியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (பொறுப்பு) கோ. விசயராகவன் ஆட்சி மொழித் திட்ட விளக்கவுரையாற்றினார். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கருத்துரையாற்றினார். தமிழ்நாடு உணவுப் பொருள்கள் வியாபாரிகள் சங்கத் தலைவர் பெரீஸ் மகேந்திரவேல், காவல் உதவி ஆணையர் ஆ. மணிவண்ணன், வணிகர்கள் சங்கப் பேரவை மதுரை மாவட்டத் தலைவர் கா. ராஜபாண்டியன், வணிகர்கள் சங்க பேரமைப்பு மாவட்டத் தலைவர் த. செல்லமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  முன்னதாக, மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் க. பசும்பொன் வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ. முகம்மது ரசூல் நன்றி கூறினார்.
    இதில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடந்த பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com