ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க மேலூர் விவசாயிகள் வலியுறுத்தல்

கம்பம் முதல் குறிச்சிப்பட்டிவரை அனைத்து பகுதிகளையும் ஒருபோகமாக அறிவித்து பெரியாறு-வைகை அணைகளில் இருந்து உடனே தண்ணீர் திறந்துவிட மேலூர் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கம்பம் முதல் குறிச்சிப்பட்டிவரை அனைத்து பகுதிகளையும் ஒருபோகமாக அறிவித்து பெரியாறு-வைகை அணைகளில் இருந்து உடனே தண்ணீர் திறந்துவிட மேலூர் விவசாயிகள் வலியுறுத்தினர்.
   மேலூர் பகுதி விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  வட்டாட்சியர் சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் என்.பழனிச்சாமி பேசியது:
  தென்மேற்கு பருவமழை ஜூன் 1 இல் தொடங்கும்போதே கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்துக்கும், அடுத்து கள்ளந்திரி மதகுவரையிலான விவசாயத்துக்கும்,  அதையடுத்து ஆகஸ்ட் 15-இல் மேலூர் உள்ளிட்ட ஒரு போகத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டபோது அனைத்துப் பகுதிகளும் நன்கு விளைந்தன. ஆனால், அணைகளில் நீர் இருப்பைக் கணக்கிட்டுக்கொண்டு,  சுற்றுச்சூழலை கவனத்தில் கொள்ளாமல் தண்ணீர் திறப்பதால் பருவமழை போதிய அளவு பெய்வதில்லை. அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதால் முழுமையாக விளைவிக்க முடியாது. எனவே, தற்போதைய சூழ்நிலையில், கம்பம் முதல் குறிச்சிப்பட்டிவரை உடனே தண்ணீர் திறக்கவேண்டும்.  அணைகளில் நீர் இருப்பைக் கணக்கிட்டு தாமதமாகத் தண்ணீர் திறப்பதாலே மேலூர் பகுதியில் மூன்று வருடங்களாக விவசாயம் நடைபெறவில்லை. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப்பகுதிகளில் பல வருடங்களாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
அனைத்துப் பகுதிகளுக்கும் உடனே தண்ணீர் திறக்குமாறு ராஜமாணிக்கம், அடக்கிவீரணன், மலம்பட்டி ராஜா, அ.வல்லாளபட்டி ராமு, அடக்கலம்,பாண்டி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். மலம்பட்டியைச் சேர்ந்த ராஜா, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து மதுரை குடிநீர் திட்டத்துக்கு ரூ.1,300 கோடி மதிப்பிலான குழாய்ப்பாதை திட்டப் பரிந்துரையை அரசு ஏற்கக்கூடாது. கம்பம் பள்ளத்தாக்கு சுற்றுச்சூழலை இத்திட்டம் பாதிக்கும்.  தேனி மாவட்டத்தில் மலைத்தோட்ட விவசாயத்துக்கு ஆற்றில் நடக்கும் தண்ணீர்திருட்டை போர்க்கால அடிப்படையில் தடுக்கவேண்டும் என்றார்.
பெரியாறு கிளைக் கால்வாய்களைத் தூர்வாரும் பணியை முறையாகச் செய்யவேண்டும். தண்ணீர் திறக்கப்படும்போது ஏனோதானோ என அவசர கதியில் வேலை செய்யக்கூடாது என விவசாயிகள்கேட்டுக்கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில், வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம், தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com