டெங்கு தடுப்பு பணிகளில் தொய்வு: அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் டெங்குவை ஏற்படுத்தும் கொசு ஒழிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டால் டெங்குவுக்கு பலர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்று அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.செந்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்குவை ஏற்படுத்தும் கொசு ஒழிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டால் டெங்குவுக்கு பலர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்று அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.செந்தில் தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை தெரிவித்தது:  
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசின் உத்தரவுக்கிணங்க அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  ஆனாலும்  டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் டெங்குவை பரப்பும்  கொசுக்களை ஒழிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது தான்.
 தற்போது, தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் டெங்குத் தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கொசுக்களை ஒழிக்க சுகாதாரத் துறையுடன் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் இணைந்து தடுப்புப் பணிகளை முடுக்கி விட வேண்டும். குறிப்பாக 45 நாள்களுக்குள் டெங்கு கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் டெங்கு பாதிப்புக்கு தமிழகம் முழுவதும் பலர் உயிரிழக்கும்  அபாயம் உள்ளது.
எனவே சுகாதாரத்துறையுடன் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் கைகோர்த்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகளிலும், தூய்மை பணிகளிலும் ஈடுபட வேண்டும். இதுதொடர்பாக  பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட வேண்டும்.
 தற்போது தமிழக அரசு 7-ஆவது ஊதியக்குழுவை  அறிவித்துள்ளது. இது 21 மாதங்கள் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊதிய நிலுவைகள் இன்றி அரசு அறிவித்துள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.   அரசு மருத்துவ பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதுடன், 5 மணி நேரம் வரையிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை பணிகளையும் சேர்த்து செய்கின்றனர். ஆனால், கலை அறிவியல், பொறியியல் கல்லூரி பேராசிரியர்களை விடக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றபடாததால் போராட்டம் நடத்துவதற்கு தயாராக இருந்தாலும் தற்போது டெங்கு பாதிப்பு சூழலை கவனத்தில் கொண்டு போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம் என்றார்.
அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ரவீந்திரன், அழகர் வெங்கட் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com