கழிவு நீர்த் தொட்டி அமைக்காத வீடுகளுக்கு நோட்டீஸ்

மதுரையில் கழிவு நீர்த் தொட்டிகள் அமைக்காத வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

மதுரையில் கழிவு நீர்த் தொட்டிகள் அமைக்காத வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
மதுரையில் மண்டலம் 3 (கிழக்கு) மீனாட்சி நகர் பகுதியில் ஆணையர் அனீஷ்சேகர் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பேவர் பிளாக் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அவனியாபுரம் பைபாஸ் சாலையில் மாநகராட்சி இடத்தில் அமைக்கப்படும் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
சுப்பிரமணிய கோனார் தெருவிலும், அன்னை அபிராமி தெருவிலும் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் மாநகராட்சி அனுமதியைவிட கூடுதலாகக் கட்டிய தனியார் கட்டடப் பணியை நிறுத்த உத்தரவிட்டார். மேலும், கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கவும் கூறினார்.
மீனாட்சி நகர் 6-வது தெருவில் உள்ள வீட்டிலிருந்து கழிவு நீரானது நேரடியாக திறவை சாக்கடை கால்வாயில் விட்டிருந்ததை ஆணையர் கண்டறிந்து, அந்த வீட்டின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, அபராதம் விதிக்கவும், கழிவுநீர்த் தொட்டிகளை அமைக்காத மற்ற வீடுகளுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரவும் உத்தரவிட்டார். மீனாட்சி நகர் பகுதியில் காலியிடத்தில் குப்பைகளைக் கொட்டியிருந்தவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு ஆணையர் கூறினார். தூய்மைப் பணி விழிப்புணர்வு ரதம்: மதுரை மாநகராட்சி சார்பில் தூய்மை சேவை இயக்கத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் தூய்மைப் பணி விழிப்புணர்வு ரதம் ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது.
சனிக்கிழமை ஆணையர் அனீஷ் சேகர் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் தீர்மானிக்கப்பட்ட விவரங்கள்:
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் முதல் பைபாஸ் சாலை வரை, கே.கே.நகர் பகுதி, முனிச்சாலை, நேதாஜி சாலை ஆகியவற்றில் தீவிர துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். திங்கள்கிழமை (செப்.18) மாநகராட்சி மருத்துவமனைகளிலும், செவ்வாய்க்கிழமை (செப்.19) காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட் பகுதியிலும், புதன்கிழமை (செப்.20) மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகம், வார்டு அலுவலகங்கள், லாரிகள் நிறுத்துமிடங்கள், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் ஆகியவற்றில் தீவிரத் துப்புரவுப் பணிகள் நடைபெறும். வியாழக்கிழமை வைகை ஆற்றுப் பகுதிகளில் தீவிர துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். வெள்ளிக்கிழமை (செப்.22) மாநகராட்சிப் பள்ளிகளிலும், சனிக்கிழமை (செப்.23) அனைத்து சமுதாய மற்றும் பொதுக் கழிப்பறைகள், ஞாயிற்றுக்கிழமை (செப்.24) கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணியும் நடைபெறவுள்ளன.
இதேபோல வரும் 26ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், 27 ஆம் தேதி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், 28 ஆம் தேதி திருமலை நாயக்கர் மகால், காந்தி நினைவு அருங்காட்சியகம், 29 ஆம் தேதி அனைத்து தேவாலயங்கள், 30 ஆம் தேதி மசூதிகள் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அக்டோபர் 1 ஆம் தேதி ரயில் நிலையம் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்களில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜயந்தியை முன்னிட்டு தூய்மை சேவைப் பணியில் ஈடுபட்ட பள்ளிகள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்களுக்கு பரிசுகள் வழங்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com