சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி இளைஞர்களிடம் உள்ளது: காமராஜர் பல்கலை. துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை

சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி இளைஞர்களிடம் மட்டுமே உள்ளது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை கூறினார்.

சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி இளைஞர்களிடம் மட்டுமே உள்ளது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை கூறினார்.
அமெரிக்கன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது:
இந்தியாவில் மொத்தம் 25 சதவீத இளைஞர்கள் தான் உயர்கல்வி பெறுகின்றனர். ஆனால், தமிழகத்தில் 44 சதவீத இளைஞர்கள் உயர்கல்வி பெறுகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும். கல்வியானது மனிதனை இருளில் இருந்து வெளிச்சத்திற்கும், எதிர்மறை ஆற்றலில் இருந்து நேர்மறை ஆற்றலுக்கும் மாற்றும் கருவி. எந்தத் துறையும் குறைந்த மதிப்புடையதல்ல. ஆர்வமும், திறமையும் இருந்தால் மாணவர்களால் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும். நமது வெற்றியின் அளவு நம்முடைய முயற்சியைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவில் இளைஞர்கள் சக்தி தேவைக்கு அதிகமாகவே உள்ளது. அதை சரியாக உபயோகித்தால் இந்தியா நிச்சயம் வல்லரசாக மாறும். சரியான வழிகாட்டி இல்லாமல் இளைஞர்கள் சில இடங்களில் சறுக்குவதுண்டு. எனவே இளைஞர்கள் தங்களுக்கான தகுதியான தலைவரைத் தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும். சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை இளைஞர்களுக்கு மட்டுமே உள்ளது.
சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்காமல் ஆக்கப்பூர்வமான பணிகளில் இளைஞர்கள் ஈடுபடுவது அவசியம். சமீபகாலமாக இந்தியாவில் இருக்கும் திறமையான இளைஞர்கள் அதிக ஊதியத்திற்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இந்தப் போக்கு மாற வேண்டும். இளைஞர்கள் தங்கள் திறமையை கண்டுபிடித்து அதை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்துவது அவசியம் என்றார். விழாவில் 457 இளங்கலை மாணவர்கள், 203 முதுகலை மாணவர்கள், 66 இளங்கலை ஆய்வு மாணவர்கள் என மொத்தம் 726 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
கல்லூரித் தலைவர் பிஷப் எம்.ஜோசப், கல்லூரி முதல்வர் ம.தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் ஜி.சி.ஆபிரஹாம், நிதிக்காப்பாளர் ஜெ.ஹெலன் ரத்ன மோனிகா மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com