பெரியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்: அலட்சியமாக செயல்படுவதாக பொதுப்பணித் துறையினர் மீது புகார்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பெரியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பெரியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தனர்.
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் செல்வபாண்டி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சந்திரசேகர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அனுசுயா, தோட்டக்கலை துணை இயக்குநர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வறட்சி காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பெரியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இப்போது நல்ல மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆகவே, பெரியாறு இருபோக பாசனப் பகுதிக்கும், அதைத் தொடர்ந்து ஒருபோகப் பாசனப் பகுதிக்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.முருகன் வலியுறுத்தினார். கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எம்.பழனிசாமி மற்றும் பல்வேறு விவசாயிகள் இதே கருத்தை வலியுறுத்தினர்.
இதற்கு பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பதில் அளித்து பேசியது: பெரியாறு-வைகை அணைகளின் நீர்மட்டம் இப்போது தான் உயர்ந்து வருகிறது. இப்போது இரு அணைகளின் மொத்த நீர்இருப்பு 3400 மில்லியன் கன அடியாக இருக்கிறது. இந்த நீர்இருப்பு 4 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தவுடன் தண்ணீர் திறக்கப்படும் என்றனர்.
அப்போது குறுக்கிட்டு பேசிய விவசாயிகள், தண்ணீர் திறக்கும் நடவடிக்கையில் பொதுப்பணித் துறையினர் ஒவ்வொரு முறையில் மிகவும் தாமதமாகவே செயல்படுகின்றனர் என்று குற்றஞ்சாட்டினர். அணைகளின் நீர்இருப்பு, அடுத்து வரும் நாள்களில் எதிர்பார்க்கப்படும் மழை, பெரியாறு பாசனத் திட்டத்தில் உள்ள கண்மாய்களின் நீர்இருப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டு அரசுக்கு உரிய பரிந்துரை அனுப்ப வேண்டும். முந்தைய காலங்களில் இத்தகைய நடைமுறை இருந்தது. இன்றைய நிலவரப்படி தண்ணீர் திறப்பதற்கான கருத்துரு அனுப்பும் பணியைத் தொடங்கினால், அடுத்து வரும் நாள்களில் எதிர்பார்க்கப்படும் நீர்மட்டத்தை அடைந்துவிடும். அரசும் அணையைத் திறக்கும் அறிவிப்பை வெளியிட ஏதுவாக இருக்கும் என்றனர்.
விவசாயிகள் பலரும் ஒரே நேரத்தில் குரல் எழுப்பியதால் கூச்சல் குழப்பம் நேரிட்டது. பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் பேசுகையில், பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆகவே, உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குலமங்கலம் பகுதி விவசாயி திருப்பதி பேசுகையில், விவசாய மின்இணைப்புக்கு முந்தைய நடைமுறைப்படி மாவட்ட அளவிலான மூப்பு பட்டியல் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பாண்டியன் பேசுகையில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், பழங்களை மதிப்புகூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவது குறித்து படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்.
பெரியாறு அணையில் இருந்து குழாயில் தண்ணீர் கொண்டுவர எதிர்ப்பு
மதுரை மாநகரப் பகுதியின் குடிநீர்த் தேவைக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் வழியாக குடிநீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் விவசாயத்துக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். ஏற்கெனவே வைகை அணையை ஆதாரமாகக் கொண்டு 2 குடிநீர்த் திட்டங்களை மாநகராட்சி செயல்படுத்தி இருக்கிறது. மாநகர் விரிவாக்கம் ஏற்படும் நிலையில் குடிநீர்த் தேவை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது. மாற்று ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும். குழாய் வழியாக தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தைச் செயல்படுத்தினால், விவசாயம் முழுமையாக அழிந்துபோகும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com