மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் செப். 21 முதல் கொலு அலங்காரம், சிறப்புப் பூஜைகள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வியாழக்கிழமை முதல் கொலு அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வியாழக்கிழமை முதல் கொலு அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் என். நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வரும் 21ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு கொலு அலங்காரம் நடைபெறுகிறது.
உற்சவ நாள்களில் தினமும் மாலை 6 மணி முதல் மீனாட்சி அம்மன் மூலஸ்தான சன்னதியில் திரைபோட்டு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். பின்னர் கல்ப பூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்றவையும், இரவு 8.30 மணிக்கு நடைபெறும். பூஜை நேரங்களில் பக்தர்களுக்கு தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் (அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரம் திருக்கல்யாண திருக்கோல சன்னதி) அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அம்மனுக்கு தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் நடைபெறும்.
வரும் 21ஆம் தேதி வியாழக்கிழமை மாலை அம்மன் ஸ்ரீராஜராஜேஸ்வரி, வெள்ளி ஊஞ்சல், சனி ஞானப்பால் அருளியது, ஞாயிறு அருள்மிகு விநாயகர் அவதரித்தல், திங்கள் கோலாட்டம், செவ்வாய் திருக்கல்யாண கோலம், புதன் குண்டோதரருக்கு அன்னமிடல், வியாழன் (செப்.28) மஹிஷாசுரமர்த்தினி, வெள்ளி சிவபூஜை என அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.
வரும் வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரை திருக்கோயிலில் உபயதிருக்கல்யாணம், தங்கரத உலா ஆகியவை நடைபெறாது. மேலும், சாந்தாபிஷேகம், அன்னாபிஷேகம், அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருமாள் கோயிலில் கொலு: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் புரட்டாசித் திருவிழா வரும் 23ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சனிக்கிழமை காலை 6.30 மணி முதல் 7.45 மணிக்குள் கொடியேர்றம் நடைபெறும். சுவாமி அன்னவாகனத்தில் எழுந்தருள்கிறார்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து ஞாயிறு கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம், கஜேந்திர மோட்சம், ராஜாங்க சேவை, காளிங்க நர்த்தனம், மோகனாவதாரம், சேஷ சனம் என வரும் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை சுவாமி அலங்காரங்களில் அருள்பாலிக்கிறார். அன்று இரவு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருள்வார். செப்டம்பர் 30ஆம் தேதி சனிக்கிழமை வெண்ணைதாழி, ஞாயிறு திருத்தேர், பூப்பல்லக்கு, திங்கள் சப்தாவர்ணம், பூச்சப்பரம் தெப்ப உற்சவம் என விழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை அழகர்கோயில் தக்கார் வி.ஆர். வெங்கடாசலம் மற்றும் கோயில் துணை ஆணையர் செ. மாரிமுத்து உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com