18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வருத்தம் அளிக்கிறது: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வருத்தம் அளிப்பதாக மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி. ராஜன்செல்லப்பா  தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வருத்தம் அளிப்பதாக மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி. ராஜன்செல்லப்பா  தெரிவித்தார்.

 மதுரையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:    தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம், பொதுக்குழுவுக்கு முன்பு  கட்சியில் நிரந்தர பொதுச் செயலர் இல்லை என்ற முடிவு எடுத்த பிறகு, தாற்காலிக பொதுச் செயலரை நீக்குவது, அதை அறிவிப்பது தேவையில்லையே எனக் குறிப்பிட்டேன். இருப்பினும் அப்போதைய சூழலுக்கு ஏற்ப முதல்வர் முடிவு செய்திருக்கலாம்.  பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து தீர்மானங்களுக்கு ஒப்புதல் தெரிவித்தேன்.  சக சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம்தான். இருப்பினும் சட்டப்பேரவைத் தலைவர் உரிய சட்ட விதிகளின்படி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். அதில் கருத்து மாறுபாடு இல்லை.  அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்குப் பதிலாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களை கட்சியில் இருந்து தாற்காலிமாக  நீக்கி இருக்கலாம். அதன் மூலம் அவர்கள் சுயேச்சை உறுப்பினர்களாக செயலாற்றி இருக்க முடியும் என்பது என்னைப் போன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்தாகும்.  ஏற்கெனவே 12 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனித்து செயல்பட்டபோது, அவர்கள் மீண்டும் இணைந்துவிடுவர் என்ற நம்பிக்கை இருந்ததால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இப்போது  அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் இருக்கிறது. இதனால் ஆட்சிக்குப் பாதிப்பு இல்லை. இந்த ஆட்சி இன்னும் ஸ்திரத் தன்மையுடன் சிறப்பாகச் செயலாற்ற வேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை வெளிப்படையாகக் கூறி வருகிறேன். அதற்காக கட்சிக்கும், ஆட்சிக்கும் பாதகமாக ஒருபோதும் செயல்படமாட்டேன். கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று கூடும் காலம் வரும்.
கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்:   மதுரை மாவட்டத்துக்கும், மதுரை வடக்குத் தொகுதிக்கும் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுத்தாமலேயே இருக்கிறது. தமிழக முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தி, அந்த திட்டங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர அரசாணை பிறப்பிக்க வேண்டும். பதவியில்  எத்தனை நாள்கள் இருக்கிறோம்  பதவியில் இருக்கும் காலத்தில் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதையே பெரிதாகக் கருதுகிறேன்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டது. மதுரை வடக்கு தொகுதிக்கு உள்பட்ட வண்டியூர் கண்மாய், செல்லூர் கண்மாய் தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.  இவற்றுக்கு இதுவரை அரசாணைப் பிறப்பிக்கப்பட வில்லை. உள்ளாட்சி நிர்வாக அமைப்பின் பதவிக் காலம் முடிந்து ஓராண்டாகப் போகிறது. அதன் பிறகு மாநகராட்சியின் பொதுநிதியில் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. குறிப்பாக மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் பொது நிதியில் ஒரு சாலைப் பணிகூட நடைபெறவில்லை.  மாநகராட்சி அதிகாரிகள் நிதி இல்லை என்கின்றனர். மாநகராட்சியில் பணிகள் தொடர உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர், தலைமைச் செயலர் ஆகியோரிடம் ஏற்கெனவே இரு முறை தெரிவித்து உள்ளேன். இதன் பிறகும் நடவடிக்கை இல்லையென்பதால் இப்போது திறந்த மனதுடன் கூற வேண்டிய  சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் பணிகளைத் துரிதப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com