கிரானைட் முறைகேடு: இரு வழக்கில் 697 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்: அரசுக்கு ரூ.718.36 கோடி இழப்பு

கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டப்பட்டதில் அரசுக்கு ரூ.717.கோடியும் மற்றும் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தினர்

கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டப்பட்டதில் அரசுக்கு ரூ.717.கோடியும் மற்றும் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தினர் சட்டவிரோத கிரானைட் கற்களை அடுக்கிவைத்து சேதப்படுத்தியதில் ரூ.83.60 லட்சம்  இழப்பு என இரு வழக்குகளில் 697 பக்க குற்றப் பத்திரிகையை, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
      சருகுவலையபட்டி அருகே உள்ள நல்லான்குளம், சருகுவலையபட்டி அரசு புறம்போக்கு நிலம், கீழவளவு சுட்டிப்பனையன் கண்மாய் பகுதியிலும் சட்டவிரோதமாக கிரானைட்  கற்கள் வெட்டிக் கடத்தப்பட்டது தொடர்பாக, கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக, மதுரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
     இப்பகுதியில் கிரானைட் கற்கள் வெட்டப்பட்டதில் அரசுக்கு ரூ. 717.52 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, பி.கே.எம். செல்வம், ஐஸ்வர்யா கிரானைட் ராக் எக்ஸ்போர்ட்,  எம்.எஸ்.கிரானைட், சங்கரநாராயணன் உள்பட 10 பேர் மீது, மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் பி. குருசாமி 520 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார்.
     திருவாதவூர் அருகே உள்ள ஆரணன்தொழுவன்குளம், சூரக்குண்டு கண்மாய், மணக்குளம் கண்மாய், இலுப்பக்குடி கால்வாய் மற்றும் மடை பகுதிகளில் சட்டவிரோத கிரானைட் கற்களைஅடுக்கிவைத்து சேதப்படுத்தியதில் அரசுக்கு ரூ. 83.60 லட்சம்இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் பி. பழனிச்சாமி உள்பட 23 பேர் மீது மேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
    இது குறித்து மேல்விசாரணை நடத்திய தனிப்படை ஆய்வாளர் பி.என். ராஜாசிங், 177 பக்கமுள்ள குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார். அப்போது, கிரானைட் முறைகேடு வழக்குகளுக்கான அரசு சிறப்பு வழக்குரைஞர் ஷீலா உடனிருந்தார்.
     கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக பதிவான 98 வழக்குகளில் இதுவரை 77 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
     விசாரணை தள்ளிவைப்பு: கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக மேலூர், ஒத்தக்கடை மற்றும் கீழவளவு போலீஸார் தொடர்ந்திருந்த 8 குற்ற வழக்குகள் மற்றும் 48 இடங்களில் சட்டவிரோதமாக வெட்டி எடுத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்க அனுமதி கோரி, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் தாக்கல் செய்திருந்த 48 வழக்குகளும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.       மாஜிஸ்திரேட் இல்லாததால், இவ்வழக்குகள் மீதான விசாரணையை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com