"ரோட்டா வைரஸ்' தடுப்பு சொட்டு மருந்து மூலம் குழந்தைகள் இறப்பைத் தடுக்கலாம்: ஆட்சியர்

ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து மூலம் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறப்பதைத் தடுக்க முடியும் என்று, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து மூலம் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறப்பதைத் தடுக்க முடியும் என்று, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவுறுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்கும் ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி, அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிப் பேசியதாவது:நாட்டில் ரோட்டா வைரஸ் கிருமி தொற்றால் ஆண்டுக்கு 78 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இறப்பைத் தடுப்பதற்காக, தேசியத் தடுப்பு ஊசித் திட்டத்தின் கீழ் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து படிப்படியாக கொடுக்கப்பட்டுள்ளது.  
முதல் கட்டமாக, ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், ஆந்திரம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக, தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
 இதுவரை ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த ரூ.1000 மதிப்பிலான இத் தடுப்பூசி, 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த 6-ஆவது வாரம், 10 மற்றும் 14-ஆவது வாரங்களில் ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து செலுத்தப்பட வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், சத்துணவு மையங்களில் வழக்கமான தடுப்பூசிகளுடன் வழங்கப்படும். மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை 473 மையங்களில் வழங்கப்படும்.  ஒவ்வொரு வாரமும் 970 குழந்தைகள் வீதம், ஆண்டுக்கு 50,440 குழந்தைகள் பயனடைவர் என்றார்.
நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை துணை இயக்குநர் அர்ஜூன்குமார், நகர்நல அலுவலர் சதீஸ்ராகவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com